தொடக்கநிலை 1-3 மாணவர்கள் ஜூன் 28 முதல் ஒரு வாரம் வீட்டிலிருந்தபடி கற்பர்
இம்மாதம் 28ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்கள் ஒரு வார காலத்திற்கு வீட்டிலிருந்தவாறு கற்பர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜூன் விடுமுறைக்குப் பின் மாணவர்களைப் படிப்படியாக பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
உயர்நிலை 1, 2 மாணவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிவரைக்கும் வீட்டில் இருந்தபடி கற்பர் என்றும் ஜூலை 1ஆம் தேதி வியாழக்கிழமை அவர்கள் பள்ளிக்குத் திரும்புவர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்கள், உயர்நிலை 3 முதல் 5 வரையிலான மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், மில்லெனியா கல்வி நிலைய மாணவர்கள் ஆகியோர் மட்டுமே இம்மாதம் 28ஆம் தேதி புதிய தவணைக்காலம் தொடங்கியதும் பள்ளிக்குத் திரும்புவர்.
ஜூலை 5ஆம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் மறுநாள் 6ஆம் தேதியில் இருந்து எல்லா மாணவர்களும் பள்ளிக்குத் திரும்புவர்.
மூன்றாவது மொழி அல்லது கலை, இசை விருப்பப்பாட நடவடிக்கைகள் போன்ற மையம் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்பவர்களும் தேர்வெழுதும் மாணவர்களும் மூன்றாம் தவணைக் காலத்தின் முதல் வாரத்திலேயே நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம். தேர்வெழுதாத மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு கற்பது தொடரும்.
மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து மையம் சார்ந்த வகுப்புகளில் எல்லா மாணவர்களும் நேரடியாகப் பங்கேற்கலாம்.
உயர்கல்வி நிலையங்களும் மாணவர்களைப் படிப்படியாகக் கல்விக்கூடங்களுக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
முன்னர் இணையம் மூலம் இடம்பெற்ற சிறிய குழுக்கள் பங்கேற்கும் வகுப்புகளை அல்லது ஆலோசனை நடவடிக்கைகளை வரும் 21ஆம் தேதியில் இருந்து வளாகத்தில் மீண்டும் தொடங்கலாம்.
ஆய்வகங்கள், செய்முறைப் பயிற்சிகள் போன்ற அத்தியாவசியமான நேரடி அமர்வுகளுக்காக மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரில் செல்லலாம். அரங்கிற்கு 50 பேருக்கு மிகாதபடி நேரடித் தேர்வு நடவடிக்கைகளைத் தொடரலாம்.
தங்களது இளம்பிள்ளைகளுக்கான பராமரிப்பு ஏற்பாடுகள் தேவைப்படுவோர்க்காக, கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளும் பள்ளி சார்ந்த மாணவர் பராமரிப்பு மையங்களும் இம்மாதம் 28ஆம் தேதி முதல் மீண்டும் முழுவதுமாகத் திறக்கப்படும்.
சிறப்புக் கல்வி பள்ளி மாணவர்களும், தங்களின் தேவைகளின் அடிப்படையில், வரும் 28ஆம் தேதி முதல் படிப்படியாகப் பள்ளிக்குத் திரும்புவர். ஜூலை 6 முதல் எல்லா மாணவர்களும் பள்ளிக்குத் திரும்புவர்.
மாணவர்கள் நேரில் பங்கேற்க வேண்டிய இணைப்பாட நடவடிக்கைகளை அடுத்த தவணைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து படிப்படியாகத் தொடங்க அமைச்சு திட்டமிட்டு வருகிறது. கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள நடவடிக்கைகள் முதலில் தொடங்கப்படும்.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுகலப்பதைக் குறைக்கும் நோக்கில், இளநிலை, 'சி' பிரிவு ஆகியோர்க்கான தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளும் 'ஏ' பிரிவில் எஞ்சி உள்ள போட்டிகளும் ரத்து செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
18 வயதும் அதற்கும் குறைந்தவர்களுக்குமான நேரடி துணைப்பாட, செறிவூட்டல் வகுப்புகளை இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கலாம்.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதைக் கல்விக்கூடங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதனிடையே, மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கிட்டத்தட்ட 90% மாணவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் மூவரில் ஒருவர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகவும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நல்வாழ்விற்கும் இடையறாக் கற்றலுக்கும் கல்வி அமைச்சு முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு சான், தொடர்ந்து நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அதற்கேற்றபடி மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

