நான்கு கட்ட 'தேசிய மீட்சித் திட்டம்' குறித்து மலேசிய பிரதமர் முகைதீன்
தற்போது மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையால் அரசாங்கத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் (S$320 மி.) செலவாவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
"நாம் இப்படியே தொடர முடியாது. இந்த நெருக்கடியிலிருந்து மிக விரைவில் நாம் மீண்டு வந்தாக வேண்டும்," என்றார்.
மீண்டு வருவதற்கான நான்கு கட்டத் திட்டம் குறித்த அவரது உரை மலேசியர்களுக்காக நேற்று நேரடியாக ஒளிபரப்பானது.
'தேசிய மீட்சித் திட்டம்' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின்படி, செப்டம்பர் மாதம் முதல் மலேசியா அதன் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள், நாடாளுமன்றம் ஆகியவற்றைப் படிப்படியாகத் தொடர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் பெரும்பாலான பொருளியல் பிரிவுகள் திறந்துவிடப்படும் என்று தற்போதைய முன்னுரைப்பை ஒட்டிக் கூறப்படுகிறது.
அண்மை காலமாக மலேசியாவில் அதிகமான கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருவதை எதிர்கொள்ள, மலேசியா அதன் மூன்றாவது நாடளாவிய முடக்கநிலையில் உள்ளது.
தற்போதைய முடக்கநிலையை 'தேசிய மீட்சித் திட்டத்தின்' முதல் கட்டம் என்றார் திரு முகைதீன். நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் நிலை ஏற்பட, பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படுவதே இரண்டாவது கட்டமாகும். தொடர்ந்து சமூக நடவடிக்கைகளும் பயணத் தடைகளும் இக்கட்டத்தில் அமலில் இருக்கும். ஆனால் மலேசியாவில் பதிவாகும் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 4,000க்குக் கீழ் இருந்தால் மட்டுமே இரண்டாவது கட்டம் தொடங்கும். அத்துடன் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினராவது தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றார். இது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 2,000க்குக் கீழ் பதிவாகும்போதும் 40% மக்கள்தொகைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மூன்றாவது கட்டத் தளர்வுநிலை ஏற்படலாம். அக்டோபர் மாத இறுதி ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மூன்றாம் கட்டத் தளர்வின்போது பெரும்பாலான பொருளியல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். இருப்பினும் சமூக நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
மலேசியாவில் 60 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 500க்குக் கீழ் பதிவாகும்போது முழு தளர்வுநிலை முன்னுரைக்கப்படுகிறது. இது நவம்பர் மாதம் முதல் தொடங்கக்கூடும்.
"தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையால் நம் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருளில் இப்போது இருக்கும் நம்மால் வெளிச்சத்தை மெல்ல மெல்லக் காண முடிகிறது," என்றார் திரு முகைதீன்.
தடுப்பூசி போடப்பட்ட விகிதத்துக்கு நிகராக மீட்சித் திட்டம் இருந்தால் தளர்வு நிலை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
இவ்வாண்டு அதன் கொவிட்-19 தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் மலேசியா திணறுகிறது. மே 29ஆம் தேதியன்று 9,020 புதிய தொற்று சம்பவங்களே உச்சமாக இருந்தது.
ஒரு முறை மட்டுமே இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதியன்று 1,000க்குக் கீழ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
இந்நிலையில் ஆகஸ்ட் 1ல் முடிவடைவதாக உள்ள தேசிய அவசரநிலை குறித்து இன்று மலேசிய மன்னர் அப்துல்லா அகமது ஷா, மேலும் எட்டு மலேசிய மன்னர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகக் கூறப்பட்டது.

