இந்தியாவை மூன்றாவது கொரோனா அலை அச்சுறுத்தி வரும் வேளையில், 75 நாட்களுக்குப் பிறகு ஆகக் குறைந்த எண்ணிக்கையில் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதால் நாடு சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது. கடந்த 24 மணிநேரத்தில் கிருமியால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60,471. அத்துடன் மேலும் 2,726 பேர் கிருமி பாதிப்பால் உயிரிழந்திருந்தனர்.
இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள மொத்தம் 29,570,881 கிருமித்தொற்று சம்பவங்களில் மீண்டு வந்தோரின் எண்ணிக்கை 28,280,472 ஆகும்.
இதற்கிடையே மூன்றாவது கிருமி அலைக்கு மாநிலங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் தொடர்கிறது. மூன்றாவது அலை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளி இடப்பட்டுள்ளன.
குழந்தை மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 100 படுக்கைகளாவது தயார் நிலையில் இருக்க வேண்டும். குழந்தைநல மருத்துவர்களும் அதேபோல் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கிருமி அலையைக் கடந்துவர குழந்தைநல மருத்துவர்களை நியமித்தல் வேண்டும் என்று கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 254 பேர் கிருமித்தொற்றால் உயிர் இழந்துவிட்டனர்.
புதிய 'டெல்டா பிளஸ்'
உருமாறிய கிருமி கண்டுபிடிப்பு
இதற்கிடையே புதிய 'டெல்டா பிளஸ்' உருமாறிய கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது கொரோனா கிருமி அலைக்குக் காரணமாகக் கூறப்பட்ட 'டெல்டா' வகை கிருமி, தற்போது மேலும் உருமாறியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
'டெல்டா பிளஸ்' கிருமி, சார்ஸ்-கொரோனா கிருமி 2ன் புரதம் அதிகரித்ததன் விளைவு என்றும் இதே புரத அதிகரிப்பால் மனித செல்களில் கிருமி நுழைந்து தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் 'டெல்டா பிளஸ்' கிருமி வகை குறித்து தற்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் இந்தியாவில் இவ்வகை கிருமி அதிகம் காணப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தடுப்பூசி தொடர்பில்
நேர்ந்த முதல் மரணம்
கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 68 வயது ஆடவர் ஒருவர், மரணம் அடைந்துள்ளதை அரசாங்கக் குழுவான 'ஏஇஎஃப்ஐ' உறுதிசெய்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, இவ்வாண்டு மார்ச் 8ஆம் தேதியன்று 'அனாஃபிலேக்சிஸ்' காரணமாக அவர் உயிரிழந்ததாக குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்குப் பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் 31 சம்பவங்கள் ஆராயப்பட்டன.
இவற்றில் தடுப்பூசியால் அல்லாமல் தற்செயலாக நேர்ந்த பாதிப்பு என நம்பப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை 18. நிச்சயமற்ற காரணத்தால் நேர்ந்த பாதிப்பு என்று மூன்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
தடுப்பூசி தொடர்பில் ஏற்பட்ட பாதிப்புச் சம்பவங்கள் மூன்று. பதற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் எஞ்சிய இரண்டு சம்பவங்களை வகைப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

