தனியார் மருந்தகங்களில் சினோவேக் தடுப்பூசி: மக்களிடமிருந்து விடாமல் வரும் அழைப்புகள்

தனியார் மருந்தகங்களில் சினோவேக் தடுப்பூசி: மக்களிடமிருந்து விடாமல் வரும் அழைப்புகள்

2 mins read
75598a5a-40ef-40c8-a029-e52a52bd5be4
படம்: ஏஎஃப்பி -

சிங்கப்பூரில் உள்ள 24 தனியார் மருந்தகங்களில் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அதிலிருந்து ஒரு சில மருந்தகங்களுக்கு மக்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.

சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், நாளை முதல் குறிப்பிட்ட அந்த 24 மருந்தகங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தடுப்பூசி தொடர்பில் மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சு கூறியிருந்தது.

இருப்பினும், இன்று பிற்பகல் நிலவரப்படி குறைந்தது நான்கு மருந்தகங்களுக்கு அழைப்புகள் நின்றபாடில்லையாம்.

நூற்றுக்கணக்கில் அழைப்புகள் வந்ததாக ஒரு மருந்தகம் கூறியுள்ளது.

இதற்கிடையே, முன்பதிவு செய்வோருக்கே தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மருந்தகத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அது உதவும் என்றும் கூறப்பட்டது.

சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஒரு தடுப்பூசிக்கு $10 முதல் $25 வரை செலுத்த வேண்டியிருக்கும். இக்குறிப்பிட்ட மருந்தகங்கள், சினோவேக் தடுப்பூசியைப் போடுவதற்கான சுகாதார அமைச்சின் உரிமம் பெற்றவை.

இருப்பிலுள்ள சினோவேக் தடுப்பூசிகளை மருந்தகங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட சுகாதார அமைச்சு, இங்குள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தடுப்பூசி போடப்படலாம் என்றது.

மருந்தகங்களுக்கு இத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வோரிடமும் தடுப்பூசி தொடர்பில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அமைச்சு குறிப்பிட்டது.

தடுப்பூசிக்கான நிர்வாகக் கட்டணத்தில் மருத்துவ மருத்துவர் ஆலோசனைக் கட்டணமும் 7% ஜிஎஸ்டி கட்டணமும் உள்ளடங்கிய நிலையில் அதற்கான $10 முதல் $25 கட்டணத்தை மட்டுமே கட்டுவதாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்