அரசு ஊழியர்க்கு 0.3 மாத ஊதியம் அரையாண்டு போனஸ் அறிவிப்பு

அரசு ஊழியர்க்கு 0.3 மாத ஊதியம் அரையாண்டு போனஸ் அறிவிப்பு

1 mins read

சிங்கப்பூரின் 86,000 அரசாங்க ஊழியர்களுக்கு அரையாண்டு போனசாக 0.3 மாதச் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை ஊழியர்களுக்கு சிறப்புத் தொகையாக $350 அல்லது $700 ஒருமுறை மட்டும் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்து இருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் மீட்சி வேகம் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், இவ்வாண்டில் பொருளியல் சூழல் மேம்பட்டு இருப்பதையடுத்து அரையாண்டு போனஸ் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க ஊழியர்களின் அயராத பணியை அங்கீகரிக்கும் விதமாக, அதே வேளையில் ஒட்டுமொத்த பொருளியல் சூழலையும் கருத்தில்கொண்டு, 0.3 மாதச் சம்பளம் அரையாண்டு போனசாக வழங்கப்படுகிறது என்று பொதுச் சேவைப் பிரிவு கூறியுள்ளது.

பொருளியல் சூழலை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் ஆண்டிறுதி போனஸ் குறித்து முடிவெடுக்கும்போது இவ்வாண்டின் பிற்பகுதியில் தேசிய சம்பள மன்றம் வெளியிடும் வழிகாட்டி நெறி முறைகள் கருத்தில் கொள்ளப் படும் என்றும் கூறப்பட்டது.

கொவிட்-19 பரவலால் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை காரணமாகக் கடந்த ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு அரையாண்டு போனஸ் வழங்கப் படவில்லை. அதற்குமுன் 2009ம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடியின்போதும் அரையாண்டு போனஸ் வழங்கப் படவில்லை.