எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் தடுப்பூசி நிலையங்கள்
மலேசியாவில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 5.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 3.96 மில்லியன் பேர் தங்களுக்கான முதல் தடுப்பூசியையும் 1.55 மில்லியன் பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக நேற்று அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 147,616 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டதாகவும் 32,540 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டுத் திடல் மாபெரும் தடுப்பூசி நிலையமாக உருவெடுத்துள்ளது.
நாளை முதல் இங்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
இந்தப் புதிய தடுப்பூசி நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 10,000 தடுப்பூசிகள் வரை போடும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக இளையர், விளையாட்டு அமைச்சர் ரீஸல் மரிக்கான் நைனா மரிக்கான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் உள்ள மேலும் அதிகமான மக்கள் பயனுறும் வகையில் இந்தப் பெரிய தடுப்பூசி நிலையம் விளங்கும் என்றார் அவர்.
இங்கு 40 வயதினர் மற்றும் அதற்குக் குறைந்த வயதினருக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்த தேசிய மீட்புத் திட்டத்திற்கேற்ப விளையாட்டுத் திடல் முழுவதும் தடுப்பூசி நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று திரு ரீஸல் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மாபெரும் தடுப்பூசி நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் நாட்டிலுள்ள மக்களுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் அதிகரிக்கும் என்று வெள்ளிக்கிழமை இரவு திரு ரீஸல் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
புதிய புக்கிட் ஜாலில் தடுப்பூசி நிலையத்தில் ஆரம்பகட்டமாக தமது அமைச்சைச் சேர்ந்த 60 மலேசிய தடுப்பூசி ஆதரவுத் தொண்டூழியர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அதன் நிலவரத்தை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ரீஸல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, தடுப்பூசி போடுவோர் விகிதத்தை அதிகரிக்க வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சு மூன்றுகட்ட உத்தியை செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் ஸுரைதா கமருதீன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று தடுப்பூசிக்குப் பதிவு செய்வது, நடமாடும் தடுப்பூசி நிலையங்களை அதிகப்படுத்துவது, மக்களை நாடிச் சென்று தடுப்பூசி போடுவது ஆகியன அந்த மூன்று உத்தி என்ற அவர் கூறினார்.
பாலிக் புலாவ் கொவிட்-19 தடுப்பூசி நிலையத்திற்கு ேநற்று வருகை புரிந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்த அரசாங்கம் வகுத்திருக்கும் இரண்டாவது அம்சம் இந்த புதிய உத்தி என்றார்.

