தமது முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட மறுநாள் 72 வயது மூதாட்டி மரணமுற்றதன் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியின் காரணமாக தமது தாயார் மரணமுற்றாரா என்று திரு ஆண்ட்ரு டான் என்பவர் ஃபேஸ்புக் வழியாக எழுப்பிய கேள்வி பற்றி அமைச்சிடம் ஊடகங்கள் கேட்டன.
திருவாட்டி டோரீன் சான் என்னும் அந்த மாது இம்மாதம் 3ஆம் தேதி ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மறுநாள் ஜூன் 4ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அந்த மாது நிலைகுலைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அன்றிரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாததால் மரண விசாரணை அதிகாரியிடம் இவ்விவகாரம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஒரு வகையான இதய நோயால் மரணம் ஏற்பட்டதாக அந்த அதிகாரி கூறியதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் நீண்டகாலமாக அடைப்பு இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்ததாகவும் தடுப்பூசிக்கும் மரணத்துக்கும் தொடர்பில்லை என்றும் அமைச்சு கூறியது.

