சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று முதல் நடப்புக்கு வருகிறது
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களை நேரில் பார்க்கச் செல்வோர், 20 நிமிடங்களுக்குமேல் அங்கு இருப்பதாக இருந்தால், கொவிட்-19 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக்கு (ஏஆர்டி) உட்பட வேண்டும். இந்த நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
உள்நோயாளிகளின் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு வழங்குநர்களுக்கும் இவ்விதிமுறை பொருந்தும்.
தங்களின் கொரோனா பரிசோதனை முடிவைக் காட்டி, தொற்று இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே வருகையாளர்கள், உள்நோயாளி மருத்துவப் பிரிவுகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு மூலமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.
சுயபரிசோதனைக் கருவிகள் கொண்டு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்திற்குள் செய்துகொண்ட பல்படியத் தொடர்வினை (பிசிஆர்) பரிசோதனை முடிவுகளை வருகையாளர்கள் காட்டலாம்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் வருகையாளர்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். வருகைபுரியும் நாளன்று மட்டுமே பரிசோதனை முடிவு செல்லுபடியாகும்.
அம்மருத்துவமனையின் 'போயர் புளோக்'கில் உள்ள 'ஏஆர்டி' மையத்தில் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் அடுத்த 20 நிமிடங்களில் முடிவு கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை ஒட்டி, இந்த விரைவுப் பரிசோதனை நடைமுறை இடம்பெறுவதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை குறிப்பிட்டது.
"கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், எங்களின் பணியாளர்களும் நோயாளிகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த, முன்னெச்சரிக்கையாக வருகையாளர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முக்கியம்," என்று அம்மருத்துவமனை கூறியுள்ளது.
இப்போதைய உள்நோயாளிகளைப் பொறுத்தமட்டில், 'ஏஆர்டி' பரிசோதனைக்கு உட்பட வேண்டியது குறித்து அவர்களின் பிரத்தியேக பராமரிப்பு வழங்குநர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
புதிய நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பு வழங்குநர்களுக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது தகவல் தெரிவிக்கப்படும்.

