இந்தியா: 6-8 வாரங்களில் கிருமித்தொற்று 3வது அலை

இந்தியா: 6-8 வாரங்களில் கிருமித்தொற்று 3வது அலை

1 mins read

'எய்ம்ஸ்' மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை

பொது­மக்­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களுக்­கும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளுக்­கும் இணங்கி நடக்­கத் தவ­றி­னால், அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்­களில் இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை தாக்­கக்­கூ­டும் என்று எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் தலை­வர் டாக்­டர் ரந்­தீப் குலே­ரியா எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரு­கிறது. இதை அடுத்து, தமிழ்­நாடு உட்­பட பல மாநி­லங்­களும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரு­கின்­றன.

இத­னால், பல நாள்­க­ளாக தொடர்ந்து வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்­கிக் கிடந்த மக்­கள் வெளி­யில் செல்ல ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். கடைக­ளி­லும் சந்­தை­க­ளி­லும் மக்­கள் கூட்­டம் அலை­மோ­து­கிறது. அவர்­களில் பல­ரும் முகக்­க­வ­சம் அணி­யா­ம­லும் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றா­ம­லும் திரி­வ­தைச் செய்தி நிறு­வ­னங்­க­ளின் படங்­கள் காட்­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், "மக்­கள் விதி­க­ளுக்கு இணங்கி நடக்கவில்­லை எனில், அடுத்த 6-8 வாரங்­க­ளுக்­குள் 3­வது அலை தாக்­கக்­கூ­டும். பர­வ­லாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­வரை, இன்­னொரு கொரோனா பேரலை உரு­வா­கா­மல் தடுக்க நாம் தீவிர­மா­கப் பணி­யாற்ற வேண்­டும்," என்று டாக்­டர் குலே­ரியா எச்­ச­ரித்­து இருக்கிறார்.

மூன்­றா­வது அலை­யின்­போது குழந்­தை­கள் எளி­தில் பாதி­க்கப்­பட வாய்ப்புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­வதற்குச் சான்­று இல்லை என்றும் அவர் தெளிவு­படுத்­தி­னார்.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதி­தாக 58,419 பேர்க்குத் தொற்று உறு­தியானதா­க­வும் மேலும் 1,576 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் இந்­திய சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட புள்ளிவிவரம் தெரி­விக்­கிறது.