உணவகங்களில் இருவர் கொண்ட குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி
எஸ். வெங்கடேஷ்வரன்
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது என்று கடந்த மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வந்த கொவிட்-19 கட்டுப்பாடு, நேற்றுமுதல் தளர்த்தப்பட்டது. இருவர் கொண்ட குழுக்களாக மக்கள் மீண்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், உணவகங்களில் கூட்டம் அலைமோதவில்லை. பலர் தொடர்ந்து உணவை வீட்டுக்குத்தான் வாங்கிச் செல்கிறார்கள். விரைவில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும், கூட்டம் திரும்பும், என நம்புகின்றனர் லிட்டில் இந்தியா வட்டார உணவக உரிமையாளர்கள்.
"கடந்த எட்டு மாதங்களில் புதிதாக மூன்று கிளைகளைத் திறந்தோம். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மக்களால் நேரடியாக வந்து சாப்பிட முடியாமல் போனது சங்கடமாக இருக்கிறது. இப்போது இரண்டு பேர் மட்டுமே சாப்பிட முடிகிறது. நாளடைவில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினால்தான் உணவகங்களால் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்," என்றார் 'பனானா லீஃப் அப்போலா' உணவக உரிமையாளர் சங்கர் நாதன், 49.
கிருமித்தொற்று நிலை ஓரளவு முன்னேற்றம் கண்டு வியாபாரம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் 'மதுராஸ் விலாஸ்' உணவகத்தின் உரிமையாளர் திருமதி சாஃப்பியா. மே மாதம் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தன. சையத் அல்வி சாலையில் உள்ள இவரது உணவகக் கிளை, வீட்டு விநியோகச் சேவை வழங்கியும் வாடிக்கையாளர் விகிதம் 80% சரிந்ததாக தெரிவித்தார் சாஃப்பியா.
"பெரிய உணவகங்களுக்குச் செயல்பாட்டு நிர்வாகச் செலவுகள், வாடகைக் கட்டணச் செலவுகள், ஊதியச் செலவுகள் அதிகம். வாடிக்கையாளர்கள் இல்லாததால் சிறிய உணவகங்கள் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கின்றன. இப்படி எல்லா தரப்பினருக்கும் பாதிப்பு அதிகம்," என்றார் திருமதி சாஃப்பியா.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக வர்டுன் ரோட்டில் இயங்கும் நாகர்கோயில் ஆரியபவன் உணவக வியாபாரத்தில் 90%, நேரடியாக வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களை நம்பியுள்ளது. ஒரு மாதமாக வியாபாரத்தை நிறுத்தியது வருமானத்திற்குப் பலத்த அடி என்றும் இருவர் கொண்ட குழுக்களாக சாப்பிட அனுமதித்தது ஒரு நல்ல தொடக்கம் என்றும் கூறினார் ஆரியபவன் இயக்குநர் திரு தாமரை செல்வன், 45. ஆனால் அனைத்து உணவகங்களும் நேற்று திறக்கவில்லை.
"மனிதவளம், மின்சாரம் போன்ற நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட முடியாது. குடும்பமாக வந்தாலும் இரண்டு, இரண்டு பேராகப் பிரிந்தபடி சாப்பிடவேண்டும். கலந்துரையாடி மகிழ்ச்சியாக உண்ண முடியாது. அதனால் திறக்க வேண்டாம் என முடிவெடுத்தோம்," என்றார் 'முத்துஸ் கறி' உணவக நிர்வாகிகளில் ஒருவரான திருமதி விஷாலி விஸ்வனாத், 43.
இது ஒரு பக்கம் இருக்க உணவகங்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் மளிகைக் கடைகளுக்கும் இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வு உதவுகிறது.
"வாடிக்கையாளர்கள் மீண்டும் சாப்பிட வருவதால் வியாபாரத்தில் சிறிதளவு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இருந்தாலும் நட்டத்தை ஈடுகட்டுவது கடினம். கொவிட் தொடங்கியது முதல் கிட்டத்தட்ட 70% வியாபாரம் குறைந்துள்ளது. மக்கள் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வந்து கடைகளில் பொருட்கள் வாங்கி வியாபாரத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்," என்றார் 'செல்வி ஸ்ட்டோர்ஸ்' ஊழியர் திரு செல்வம் பழனிவேல், 67.
லிட்டில் இந்தியாவில் பொருள் வாங்கிவிட்டு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் அருணாச்சலபவனில் மாலை உணவு உண்ண மகள், இரண்டு பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தார் திரு பாலகிருஷ்ணன்,67. நான்கு பேராக வந்த குடும்பம் இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு நல்ல மாற்றத்தைத் தருகிறது என்றார் அவர்.
ஆனந்த பவன் உணவகத்திற்கு வேலை முடிந்து கணவருடன் வந்திருந்தார் நிர்வாக உதவியாளராகப் பணிபுரியும் திருமதி அஸ்மத் பானு, 36. தம்மைப் போல் வேலை நேரத்தின்போது மாலை உணவை எங்கே அமர்ந்து சாப்பிடுவது எனத் திண்டாடியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு தளர்வு நல்ல செய்தி என்றார்.
கூடுதல் செய்தி: இந்து இளங்கோவன்

