மலேசியாவில் இம்மாத இறுதிக்குள் 10% மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்ற தன் இலக்கை அடைய முடியாத நிலையில், முடக்கநிலையைத் தளர்த்தும் திட்டம் தாமதமாகலாம்.
தடுப்பூசியை முழுமையாக 10% மலேசியவாசிகள் போட்டுக்கொள்ளும் இலக்கு, ஜூலை இடைப்பகுதியில்தான் சாத்தியமாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த இலக்குடன் மேலும் இரண்டு முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தற்போது மலேசியாவில் நடைமுறையில் உள்ள முடக்கநிலையைத் தளர்த்துவது பற்றி மதிப்பிட முடியும் என்றார் தடுப்பூசித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைச்சர் திரு கைரி ஜமாலுதீன்.
தற்போதைய முடக்கநிலை ஜூன் 1 முதல் ஜூன் 28 வரை நடப்பில் உள்ளது. அதனையடுத்து இரண்டாம் கட்டத் தளர்வு நிலைக்கு மலேசியா முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இக்கட்டத்தில் பொருளியல் சார்ந்த துறைகளில் கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுவதாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.6 மில்லியன் மக்களுக்கு, அதாவது மலேசியவாசிகளில் ஐந்து விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன.
ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டவர்கள் 4.2 மில்லியன் பேர், அதாவது மலேசிய மக்கள்தொகையில் 12% ஆகும்.
இந்நிலையில் நேற்று 4,611 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மலேசியாவில் பதிவாகின. 4,000க்கு மேல் இருந்தாலும் இம்மாதத்தில் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது என்று கூறப்பட்டது.
தினமும் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 4,000க்குக் கீழ் இருந்தால் இரண்டாம் கட்டத் தளர்வு அறிவிக்கப்படும் என்று முன்னதாகக் கூறப்பட்டது.

