இந்தியாவில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியது

இந்தியாவில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியது

1 mins read
Google News Preferred Icon

இந்தியாவில் நேற்றுமுதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியது. முன்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வந்தது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நிதி வழங்கி தடுப்பூசியை வாங்கி வந்தன.

மாநிலங்கள் தடுப்பூசிக்காக செலவு செய்யத் தேவையில்லை என்று இம்மாதம் 7ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம் உரையில் குறிப்பிட்டிருந்தார். நேற்றுமுதல் மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசியை வழங்கத் தொடங்கியது.

இணையத்தளம் வழி முன்பதிவு செய்யும் தேவையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மக்கள் நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடைமுறையும் நேற்றுமுதல் நடப்புக்கு வந்தது.

இதற்கிடையே நேற்று புதிய உச்சமாகக் குறைந்தது ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. 14வது நாளாக இந்தியாவில் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, 100,000க்குக் கீழ் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 53,256 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. இந்த எண்ணிக்கை 88 நாட்களிலேயே பதிவான ஆகக் குறைவு என்று கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 29.9 மில்லியன். மேலும் 1,422 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.

கூடுதல் செய்தி - பக்கம் 6ல்