தமது இல்லப் பணிப்பெண்ணை பட்டினி போட்டு, சித்திரவதை செய்து, கொலை செய்த காயத்திரி முருகையன், 41, என்னும் மாதுக்கு நேற்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
"குற்றம் சாட்டப்பட்டவரின் கொடூரச் செயலையும் பயங்கரமான நடத்தையையும் விவரிக்க வார்த்தை இல்லை," என்று நீதிபதி சீ கீ ஊன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
உயிர் பிரிவதற்கு முன்னர் கொடுமையான வேதனையை நீண்ட காலத்திற்கு பணிப்பெண் அனுபவிக்கும் நிலையை குற்றவாளி ஏற்
படுத்தியதை மேற்கோள் காட்டிய நீதிபதி, "மரணம் விளைவிக்கக்கூடிய மோசமான குற்றங்களில் இதுவும் அடங்கும்," என்றார்.
தம் மீது சுமத்தப்பட்டிருந்த 28 குற்றச்சாட்டு களை பிப்ரவரியில் காயத்திரி ஒப்புக்கொண்டார். அவற்றில், வேண்டுமென்றே மரணம் விளைவித்த குற்றம் ஆகக் கடுமையானது. இதர 87 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது
கவனத்தில் கொள்ளப்பட்டன.
கொடுமைக்கு ஆளான பியாங் இங்கை டோன் எனும் பெயர் கொண்ட பணிப்பெண் மியன்மாரைச் சேர்ந்தவர். 2016 ஜூலை 26ஆம் தேதி உயிரிழக்கும்போது அவரது வயது 24. தொடர்ந்து பட்டினி போட்டதால் 24 கிலோவுக்கு உடல் எடை வற்றிய நிலையில் அப்பெண் மாண்டார். 2015 மே 28ஆம் தேதி காயத்திரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த பணிப்பெண் ஒவ்வொரு நாளும் கொடுமைக்கு ஆளானதாகவும் இக்கொடுமை மாதக் கணக்கில் நீடித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அறைவது, தள்ளுவது, கிள்ளுவது, உதைப்பது, மிதிப்பது, குளிர் நீரை மேலே ஊற்றுவது என பல்வேறு விதத்தில் பணிப்பெண் கொடுமை செய்யப்பட்டது வீட்டில் இருந்த கண்காணிப்பு கருவிகளில் பதிவானது.
கொடுமையின் உச்சமாக, சூடான இஸ்திரி பெட்டியால் அப்பெண்ணுக்கு சூடு வைத்ததும் கழுத்தைப் பிடித்து நெரித்ததும் பதிவான காட்சிகளுள் அடங்கும்.

