உணவுக்கடைகளில் சாப்பிட்டோர் தாங்கள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டுகளை அதற்கென ஏற்
படுத்தப்பட்டுள்ள அடுக்கு நிறுத்தங்களில் வைக்குமாறு நினைவூட்டப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை புதிய உத்தரவு நடப்புக்கு வந்த பின்னர் சுமார் 4,500 பேருக்கு இச்செயலை தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் நினைவூட்டியதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கூறினார்.
பொது இடங்களில் உள்ள உணவுக்கடைகளில் சாப்பிடுவோர் தாங்கள் பயன்படுத்திய தட்டுகளையும் கரண்டிகள் போன்ற பொருட்களையும் அடுக்கு நிறுத்தங்களில் கொண்டுபோய் வைக்க வேண்டும் என்பது ஜூன் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆயினும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அந்தத் தேதியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை உணவுக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் புதிய உத்தரவு அமலுக்கு வந்தது. அப்படி ஓர் உத்தரவு நடப்புக்கு வந்திருப்பதை சாப்பிட வருவோருக்கு நினைவூட்டும் பணிகளில் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 31 வரை இவ்வாறு அதிகாரிகள் நினைவூட்டுவார்கள். அந்தக் காலப் பகுதிகளில் உணவுத் தட்டுகளை அதற்கென உள்ள அடுக்கு நிறுத்தத்தில் கொண்டு போய் வைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. பொதுமக்கள் புதிய உத்தரவுக்குத் தங்களைத் தயார்ப்படுத்தும் வகையில் இந்த விதிவிலக்கு காலம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மே 14ஆம் தேதி வாரியம் அறிவித்திருந்தது. முதல் தடவை மீறுவோருக்கு எழுத்து மூலமான எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும். அதன் பின்னரும் தொடர்ந்து உத்தரவை மீறுவோருக்கு எதிரான அபராதத் தொகை $2,000 வரை கூடிக்கொண்டே போகும்.
தற்போதைய கொவிட்-19 கொள்ளைநோய், பொது சுகாதாரம், சுத்தமான தரநிலைகள் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தி உள்ளது. பொது இடங்களில் உள்ள உணவுக் கடைகளில் சாப்பிடுவோரின் மனப்போக்கையும் நடத்தையையும் மாற்ற விரிவான முயற்சிகள் மூலம் காலம் காலமாக போதிக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் சென்ற இரு உணவு நிலையங்களில் உள்ள கடைகளில் சாப்பிட்டோரில் சிலர் இன்னும் தங்களது தட்டுகளை அடுக்கு நிறுத்தங்களில் கொண்டு சென்று வைக்காததைக் கவனிக்க நேர்ந்தது. கிளமெண்டி 448 சந்தை மற்றும் உணவுநிலையத்தில் சிலர் அவ்வாறு அலட்சியம் காட்டினர்.
அதே நேரம், நார்த் பிரிட்ஜ் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு நேற்றுக் காலை 9.45 மணியளவில் செய்தியாளர்கள் சென்றபோது, பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது தட்டுகளையும் கரண்டிகளையும் அடுக்கு நிறுத்தங்களில் கொண்டு போய் வைத்ததை அவர்கள் கண்டனர். இங்கும் சிராங்கூன் கார்டன் சந்தை மற்றும் உணவு நிலையத்திலும் வாரியத்தின் அதிகாரிகள் காணப்பட்டனர்.
உணவுக் கடைகளில் நடப்புக்கு வந்துள்ள புதிய உத்தரவை காப்பிக் கடைகளுக்கும் பெரிய உணவு நிலையங்களுக்கும் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தும் பணிகளில் வாரியத்துடன் இணைந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு செயல்பட உள்ளது.

