கொவிட்-19 தொற்று ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்தும் வட்டாரங்களில் இருந்தும் வருகின்ற புதிய பயணிகள் அனைவரும் இன்று முதல் 14 நாட்கள் தங்குமிடத்திலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் 21 நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இந்தப் புதிய நிபந்தனை இன்று வியாழக்கிழமை முதல் நடப்புக்கு வருகிறது.
இருந்தாலும் அத்தகைய பயணிகள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு மூன்றாவது, ஏழாவது, பதினோராவது நாட்களில் சுயபரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி கொவிட்-19 விரைவுச் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனை நிபந்தனை ஜூன் 28 திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வரும்.
இத்தகைய பயணிகள் 14 நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றும் இடத்தை அடையும்போது அந்தக் கருவியை அவர்கள் பெறலாம்.
ஆஸ்திரேலியா, புருணை, ஹாங்காங், மக்காவ், சீனா, நியூசிலாந்து ஆகியவற்றைத் தவிர இதர எல்லா நாடுகளும் வட்டாரங்களும் அதிக தொற்றுள்ள இடங்களில் அடங்கும். இப்போது 21 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்றி வருவோருக்கு புதிய விதிகள் பொருந்தாது.
புதிய உருமாறிய கிருமி பரவுவது அதிகரித்து இருக்கிறது என்ற கவலை நிலவினாலும் அத்தகைய உருமாறிய கிருமியைப் பொறுத்தவரை தொற்று உண்டாவதற்கும் அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கும் இடைப்பட்ட காலம் அதிகமாக இல்லை என்று தெரியவந்துள்ளதை அமைச்சு அறிக்கையில் நேற்று சுட்டியது.
தொற்று ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு 21 நாள் தனிமை நிபந்தனை மே 8ஆம் தேதி முதல் தொடங்கியது.
அது முதல் அத்தகைய பயணிகளில் 270 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.
அவர்கள் அனைவரையும் பொறுத்த வரை, தொற்று உண்டாவதற்கும் அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கும் இடைப்பட்ட காலம் 14 நாட்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஆகையால் 21 நாட்களில் இருந்து 14 நாட்களாக புதிய தனிமைக் காலம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சு கூறியது.
இருந்தாலும் யாருக்காவது தொற்று இருக்குமானால் அதை முன்னதாகவே கண்டறிந்து கூடுமானவரை வேகமாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அத்தகைய பயணிகள் தங்களுக்குத் தாங்களே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு விளக்கியது.

