இர்ஷாத் முஹம்மது
எந்த ஒரு பல்லின சமுதாயத்திலும் சிறுபான்மையினராக இருப்பது சவால்மிக்கது என்பதால் சிங்கப்பூரின் சிறுபான்மை இனத்தவர்களின் தேவைகளைப் பெரும்பான்மை இனத்தவர்கள் அறிந்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்வது முக்கியம் என்று நிதிஅமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். இது அன்றாட வாழ்வின் அனைத்து அங்கங்களுக்கும் பொருந்தும் என்ற அவர், வேலை தேடுவதிலும் வாடகைக்கு இடம் தேடுவதிலும் நிலவும் பாகுபாடு
களைச் சுட்டினார். இனம் சார்ந்த தகாத கருத்துகளை மாணவர்கள், அண்டை வீட்டார், சக ஊழியர்கள், நண்பர்கள் எதிர்நோக்கு வதையும் அவர் குறிப்பிட்டார்.
எப்போதும் அல்லது அதிகம் இல்லையென்றாலும் அவ்வப்போது அவை நடக்கின்றன என்றும் அப்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன என்றும் சாதார ணமாக அவற்றை மறக்க முடியாது என்றும் நேற்று காணொளி மூலம் நடந்த இனம், இனவாதம் குறித்த கலந்துரையாடலில் விரிவாகப் பேசினார்.
அண்மையில் நடந்த இனவாத சம்பவங்கள் சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தின் நிலையைப் பற்றிய கவலையை சிங்கப்பூரர்
களுக்கு உண்டாக்கியதை அவர் குறிப்பிட்டார். கொள்கை ஆய்வுக் கழகம், எஸ். ராஜரத்னம் அனைத்துலகக் கல்விக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் சிங்கப்பூரின் பல்லின கொள்கையைப் பற்றிய சிந்தனையைப் பகிர்ந்ததுடன் அந்தக் கொள்கையை மேம்படுத்துவது குறித்து பரிந்துரைகளையும் அவர் வழங்கினார்.
சமூகங்களுக்கிடையே ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு,
நம்பிக்கையை வலுப்படுத்தி வந்துள்ளதே இதுவரை அந்தக் கொள்கைகள் செயல்பட்டதற்குக் காரணம் என்றார் அவர்.
நம் நாட்டின் பல இன வாழ்க்கைமுறையை மேம்படுத்த மூன்று பரிந்துரைகளை முன்வைத்த அமைச்சர், சிறுபான்மையினரின் தேவைகளை அறிவதைத் தவிர்த்து ஒருவரை ஒருவர் அரவணைத்து, நம்பிக்கையுடனும்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யுடனும் தொடர்ந்து வாழ
வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து பரவலாக ஆலோசித்து கொள்கைகளைச் சீர்செய்யும் என்றும் அவர் சொன்னார்.
சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சவால்களைப் பெரும்பான்மை சமூகத்தினர் அறிந்துள்ளனர் என்று தாம் நம்புவதாகக் கூறிய அமைச்சர், இன்னும் ஒரு படி அதிகமாக முயற்சி செய்து சிறுபான்மையினரை ஆறுதல் பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே மற்றவர்களை நடத்துங்கள். உங்கள் செயலைக்கொண்டு உங்கள் பிள்ளைகளையும் அவ்வாறு செய்யச் சொல்லுங்கள்," என்று வேண்டுகோள் விடுத்தார். பெரும்பான்மை சமூகத்தினருக்கும் தேவைகளும் கவலைகளும் உள்ளன என்பதை சிறுபான்மையினர் அறிந்துள்ளனர் என்று கூறினார்.
'சீன சிறப்புரிமை' குறித்து சில நேரங்களில் மக்கள் பேசுவதைச் சுட்டிய அவர், சிங்கப்பூரின் சீன சமூகம் ஒரே அடையாளத்துடனானது அல்ல என்பதை நினைவு படுத்தினார். ஆங்கிலம் பேசும் உலகில் பாதிக்கப்பட்டதாக எண்ணும் ஒரு தலைமுறை சீன
சிங்கப்பூரர்கள் உள்ளனர் என்றும் பல இன சமூகத்தை உருவாக்கி யதில் அவர்கள் ஏற்கெனவே பலவற்றை இழந்ததாக நினைக்கின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், சீன மொழி பள்ளிகள், நன்யாங் பல்கலைக்கழகம், சீன மொழி வகைகள் போன்றவற்றை எடுத்துக் காட்டினார்.
"இனம் குறித்து சிங்கப்பூரர்கள் தொடர்ந்து பேசவேண்டும். விவாதங்களைத் தொடங்க அல்ல, நாகரிகமான கலந்துரையாட
களைத் தொடங்கி, ஒருவரை ஒருவர் காது கொடுத்து கேட்டு, அனைத்து கண்ணோட்டங்களையும் புரிந்து கொள்ளவேண்டும்.
"இனவாத அனுபவங்களால் வெவ்வேறு குழுக்கள் எதிர்நோக்கும் உணர்வுகளை நேரடியாகவும் நேர்மையாகவும் பேசி, வலுவாகவும் நியாயமாகவும் களையவேண்டும்," என்றார்.
"நமது ஒவ்வொரு குழுவும் அதிகபட்ச உரிமைகளை வலி
யுறுத்தக்கூடாது; ஒவ்வொரு முறை விட்டுக்கொடுக்கும்போதும் அநியாயம் என்று கண்டிக்கக் கூடாது; நம்மைப் பிறர் கண்டுகொள்ளாதபோது அதை நமக்கு எதிரான ஒன்றாக அர்த்தம்
செய்துக்கொள்ளக்கூடாது," என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
இருப்பினும் தங்களின் எண்ணங்களைப் பகிர்வதிலிருந்து தடுத்துக்கொள்ளவேண்டாம் என்றோ தாங்கள் எதிர்நோக்கும் பாகுபாடுகளைப் பற்றி சிறுபான்மையினர் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றோ தாம் கூறவில்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் ஒரு சாரார் தங்களின் அடையாளத்தையும் உரிமையையும் வலுவாக வலியுறுத்தினால் மற்றவர்கள் அதையே மாறாக செய்யக்கூடும் என்றும் அது வெறுப்புணர்வையும் பழிக்குப் பழி வாங்கும் தன்மையையும் முடுக்கிவிடலாம் என்று எச்சரித்தார். "ஒற்றுமையை விட்டுவிட்டு வேற்றுமைகளை வலியுறுத்துவதால் சிறுபான்மையினர் வெற்றி பெறமாட்டார்கள். பெரும்பான்மை சமூகமும் பெருமளவு வருத்தம் அடையும்," என்றார் அவர்.
மாற்றம் ஏற்படுத்த முனையும் குழுக்கள் இந்த அம்சங்களை அணுகும்போது கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், ஒப்புதலுக்கான சாத்தியத்தை அதிகரிக்கவேண்டும் என்றார். கலாசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஆழமாக்கவேண்டும் என்றும் சொன்
னார்.

