சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசித் திட்டம் நேற்று முதல் வேகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 47,000 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் சனிக்கிழமையிலிருந்து நாளுக்கு 80,000 தடுப்பூசிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சில தடுப்பூசி நிலையங்களில் முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
மூன்று தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்கும் ஒரு சுகாதார பராமரிப்பு நிறுவனமும் இதனை உறுதி செய்துள்ளது.
அரசாங்கத்தின் துரித தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை மேலும் 500,000 பேர் முதல் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அதிக தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவும் கூடி வருகிறது.
தடுப்பூசி மருந்து கொள்முதல் திட்டத்தை முன்னதாகவே நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி இயக்கத்தை வேகப் படுத்த முடிந்துள்ளதாக பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு வியாழன் அன்று தெரிவித்தது.
இதனால் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்திற்குள் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற புதிய இலக்கை நிறைவேற்றக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தாங்களும் ஆயத்தமாக இருப்பதாக தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்கும் பராமரிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டு உள்ளது.
இப்போது தீவு முழுவதும் 37 தடுப்பூசி நிலையங்கள் செயல் படுகின்றன.
தாம்சன் மெடிக்கல் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சான் வெய் லிங், தங்களுடைய மூன்று தடுப்பூசி நிலையங்களிலும் இரண்டு மடங்குக்கு முன் பதிவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். பொத்தோங் பாசிர், பீஷான், செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றம் ஆகிய மூன்று இடங்களில் தடுப் பூசி நிலையங்களை இது நிர்வகிக்கிறது.
ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நடத்தும் பத்து தடுப்பூசி நிலையங் களிலும் ராஃபிள்ஸ் மெடிக்கல் குழுமத்தின் 15 தடுப்பூசி நிலையங்களிலும் இதேபோன்று முன்பதிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனிடையே பொத்தோங் பாசிர் சமூக மன்றத்தில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தில் நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நேரில் பார்த்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் காலையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் நண்பகல் முதல் கூட்டம் அதிகரித்தது.
மருத்துவப் பயிலகத்தின் தொற்றுநோய் மருத்துவர்கள் துறைக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் அசோக் குருப் இது பற்றி கூறும்போது, சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி செயல்திட்டம் வேகப் படுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி யளிப்பதாக சொன்னார்.
இதை முன்பே செய்திருக்க வேண்டும் என்று தான் கருவதாகவும் அவர் கூறினார்.

