மலேசியாவில் ஒருநாள் கொவிட்-19 பாதிப்பு 4,000க்கும் குறைவாகப் பதிவாகும் வரையிலும் தடுப்பூசி, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைப் பயன்பாடு தொடர்பான இலக்குகள் எட்டப்படும் வரையிலும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்து இருக்கிறார்.
முன்னர் அறிவித்தபடி இன்றுடன் முழு ஊடரங்கு முடிவடைய வேண்டும். ஆனாலும், கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக ஒருநாள் சராசரி கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேலும் எத்தனை நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முகைதீன் குறிப்பிடவில்லை.
ஆயினும், ஊரடங்கு நீட்டிப்புடன் புதிய நிதியுதவித் தொகுப்பையும் அரசாங்கம் அறிவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 30ஆம் தேதி 40 பில்லியன் ரிங்கிட் (S$12.9 பில்லியன்) மதிப்பிலான நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
"இப்போது நாம் கொண்டுள்ள நிவாரணத் திட்டத்தைக் காட்டிலும் புதிய உதவித் திட்டம் விரிவானதாக இருக்கும்," என்றார் திரு முகைதீன்.
ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெரும் தடுப்பூசி மையத்தை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகத்தினரைச் சந்தித்தபோது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
புதிய உதவி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியாகும்.
பெருந்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு நான்கு கட்ட வெளியேற்றத் திட்டத்தை பிரதமர் முகைதீன் அண்மையில் அறிவித்திருந்தார். மூன்று காரணிகளின் அடிப்படையில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறும் நடவடிக்கை நெறிப்படுத்தப்படும்.
அதில் முதற்கட்டம்தான் நடப்பிலிருக்கும் ஊரடங்கு. அதிகமான பொருளியல் துறைகளைச் செயல்பட அனுமதிக்கும் அதே வேளையில் பல கட்டுப்பாடுகளையும் தொடரச் செய்வது இரண்டாம் கட்டம்.
இரண்டாம் கட்டத்திற்கு நகர, மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர்க்கு இரு தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். நேற்று முன்தின நிலவரப்படி, இப்போதைக்கு 6.2 விழுக்காட்டினரே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூலை மாத நடுப்பகுதியில் 10% என்ற இலக்கு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைப் பயன்பாட்டைப் பொறுத்தமட்டில், குறிப்பாக எந்த இலக்கும் வகுக்கப்படவில்லை. இப்போதைக்கு, நாடு முழுதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 90% அதிகமான படுக்கைகளில் நோயாளிகள் இருப்பதை அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதனிடையே, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தகவலால் அதிருப்தியடைந்துள்ள மலேசியர்கள், டுவிட்டர் வழியாக தங்களின் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

