புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, வேறு வேலையில் சேர விரும்பி கடந்த ஆண்டு அதிகமான சிங்கப்பூரர்கள் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்களில் இணைந்தனர்.
சென்ற ஆண்டு மட்டும் ஏறத்தாழ 6,270 நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்களில் சேர்ந்ததாக அமைப்பு தெரிவித்தது. இது, 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 41% அதிகம்.
இந்த இடைப்பருவ வாழ்க்கைத் தொழிலர்களுக்குக் கட்டமைக்கப்பட்ட பயிற்சியும் துறை மாறும் வகையில் அல்லது தங்களது நிறுவனங்களிலேயே வேறு பொறுப்புகளை ஏற்கும் வகையில் வேலைப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக அந்த அரசாங்க அமைப்பு குறிப்பிட்டது.
முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் கிட்டத்தட்ட நூறு வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அறைகலன் வடிவமைப்பாளர்கள், நவீன உயிர்மருந்து தயாரிப்பு நிபுணர்கள் உட்பட புதிதாக 20 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு, பொதுத் தயாரிப்பு, கல்வி, தளவாடம் ஆகிய துறைகளில் உள்ள வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் அதிகம் நாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நோய்ப் பரவல் தொழில் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதே சென்ற ஆண்டில் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்களில் அதிகமானோர் சேர்ந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன், பல தொழில் நிறுவனங்களும் தங்களை உருமாற்றிக்கொள்ள இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
கொரோனா நெருக்கடி காரணமாக ஊழியர்கள் பலரும் வேலையிழந்ததாகக் குறிப்பிட்டார் 'மேன்பவர் குரூப் சிங்கப்பூர்' எனும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மேலாளர் லிண்டா டியோ.
"வாய்ப்புகள் ஒரு வரம்பிற்குள் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், துறை மாற அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள பலரும் தயாராக உள்ளனர்," என்றார் திருவாட்டி டியோ.

