தாய்லாந்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தலைநகர் பேங்காக்கிலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களிலும் உள்ள உணவகங்களில் இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு அமர்ந்து உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேங்காக் பெருநகர்ப் பகுதிகளிலும் அதனருகில் அமைந்துள்ள நான்கு மாநிலங்களிலும் இருக்கும் கட்டுமான ஊழியர் குடியிருப்பு முகாம்கள் பெரிய அளவிலான கிருமித்தொற்று முகாம்களாக உருவெடுத்துள்ளன. இதையடுத்து, உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாத வகையில் ஏற்கெனவே அக்குடியிருப்பு முகாம்களைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டுவிட்டன.
தலைநகரிலும் அண்டை மாநிலங்களிலும் கடைத்தொகுதிகள் இரவு 9 மணியுடன் மூடப்பட வேண்டும். தாய்லாந்திலும் வேறு ஐந்து மாநிலங்களிலும் 20 பேர்க்கு மேல் கூடவும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி, தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்குப் படிப்படியாகக் கதவுகளைத் திறந்துவிட தாய்லாந்து திட்டமிட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பேங்காக்கில் ஊரடங்கு விதிக்க வேண்டும் என்று கிளம்பிய குரல்களுக்குப் பிரதமர் சான் ஓ சா செவிமடுக்கவில்லை. கடும் நடவடிக்கைகள் பொருளியலைப் பாதித்துவிடும் என்ற அவர், மாறாக தடுப்பூசி போடுவதை முடுக்கிவிட வலியுறுத்தி இருக்கிறார்.
சென்ற ஆண்டில் கொரோனா தொற்றை ஓரளவு கட்டுப்படுத்திய போதும், தாய்லாந்தில் தடுப்பூசி நடவடிக்கை மந்தமாகவே உள்ளது. அந்நாட்டினரில் ஆறு விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தாய்லாந்தில் புதிதாக 3,995 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 244,447ஆக உயர்ந்தது. கிருமித்தொற்றால் மேலும் 42 பேர் மாண்டுபோக, மரண எண்ணிக்கை 1,900ஐத் தாண்டிவிட்டது.

