சிங்கப்பூரில் இனி முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்.
முன்னர் இந்த இடைவெளி ஆறு முதல் எட்டு வாரங்களாக இருந்த நிலையில், இப்போது அது நான்கு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே, இந்தக் கால இடைவெளிக் குறைப்பு நடவடிக்கையைச் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
திட்டமிட்டபடி தடுப்பூசி வரத்து இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோரில் பெரும்பான்மையோர் அடுத்த மாதத்திற்குள் முதல் தடுப்பூசியைப் போட்டிருப்பர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.
அந்த இலக்கு எட்டப்பட்டதும், இப்போது ஆறு முதல் எட்டு வாரங்களாக இருக்கும் இரு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி தொடர்பில் அமைச்சு மறுஆய்வு செய்து, பின்னர் நான்கு வாரங்களாகக் குறைக்கும்.
முதல் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளித்து, முடிந்த அளவிற்கு மக்கள்தொகையில் பெரும்பகுதியினர்க்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக கடந்த மே மாதம் இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது.
இப்போது தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, பலரும் இரண்டாவது தடுப்பூசியை முன்னதாகவே போட்டுக்கொள்ளும் நோக்கில் முன்பதிவுத் தேதியை மாற்றி வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகரான திரு சாய், 28, ஜூலை 27ஆம் தேதி மார்சிலிங் சமூக மன்றத்தில் 2வது மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதாக இருந்தார். இப்போது, கால இடைவெளி குறைக்கப்பட்டுவிட்டதால் அதற்கு 13 நாள்களுக்கு
முன்பாகவே, அதாவது ஜூலை 14ஆம் தேதியே இரண்டாவது தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ள இருக்கிறார்.
"இரண்டாவது தடுப்பூசியை விரைந்து போட்டுக்கொண்டு, அந்நடவடிக்கையை நிறைவுசெய்ய விரும்பியதால், அதற்கான தேதியை முன்னோக்கிக் கொண்டுவந்துவிட்டேன்," என்றார் திரு சாய்.

