மாற்றம் குறித்து சுகாதார அமைச்சு அறிவிப்பு
தங்களின் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இனி பதிவு செய்திடலாம்.
முன்னர் இந்த இடைவெளி ஆறு முதல் எட்டு வாரங்களாக இருந்தது. இப்போது அது நான்கு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே, இந்தக் கால இடைவெளிக் குறைப்பு நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
திட்டமிட்டபடி தடுப்பூசி வரத்து இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோரில் பெரும்பான்மையோர் அடுத்த மாதத்திற்குள் முதல் தடுப்பூசியைப் போட்டிருப்பர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.
அந்த இலக்கு எட்டப்பட்டதும், இப்போது ஆறு முதல் எட்டு வாரங்களாக இருக்கும் இரு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி தொடர்பில் அமைச்சு மறுஆய்வு செய்து, பின்னர் நான்கு வாரங்களாகக் குறைக்கும்.
முதல் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளித்து, முடிந்த அளவிற்கு மக்கள்தொகையில் பெரும்பகுதியினர்க்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாகக் கடந்த மே மாதம் இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது.
இப்போது தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, பலரும் இரண்டாவது தடுப்பூசியை முன்னதாகவே போட்டுக்கொள்ளும் நோக்கில் முன்பதிவுத் தேதியை மாற்றி வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகரான திரு சாய், 28, ஜூலை 27ஆம் தேதி மார்சிலிங் சமூக மன்றத்தில் தமது இரண்டாவது மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதாக இருந்தார்.
இப்போது, கால இடைவெளி குறைக்கப்பட்டுவிட்டதால் அதற்கு 13 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று தம்முடைய இரண்டாவது தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ள இருக்கிறார்.
"இரண்டாவது தடுப்பூசியை சீக்கிரமாக போட்டு முடித்துவிட வேண்டும் என்பதற்காக தேதியை மாற்றிக்கொண்டேன்.
"அதோடு, தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்குக் கூடுதல் சுதந்திரம் கிடைப்பதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது பரிசோதனை செய்துகொள்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது," என்றார் திரு சாய்.
இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் தேதியை மாற்றிக்கொண்ட மற்றொருவர் கணக்காளர் துறையில் நிர்வாகியான ஷேரன் சோ, 28.
ஜூன் 28ஆம் தேதியன்று தமது முதல் ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி தடுப்பூசியை சுவா சூ காங் சமூக மன்றத்தில் அவர் போட்டுக்கொண்டார்.
பின்னர் ஆறு வாரங்களுக்குப் பிறகு தமது இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதாக இருந்த நிலையில் நேற்று தேதியில் மாற்றம் செய்தார் அவர்.
இதன்படி முன்னதாக பதிவு செய்திருந்த நாளைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமது இரண்டாவது தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ள இருக்கிறார்.
மூன்று மாதக் குழந்தைக்குத் தாயான அவர், தம் மகளின் நலன் கருதி இம்முடிவை எடுத்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
"எனக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, பின்னர் அதை நான் என் குழந்தைக்குப் பரப்பும் நிலை வேண்டாம். அதனால் முடிந்தவரை மிகச் சீக்கிரமாக என்னைப் பாதுகாத்துக்கொள்ள தேதியை மாற்றிக்கொண்டேன்," என்றார் அவர்.
இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் தேதிக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள், மாற்றம் செய்வது குறித்து https://appointment.vaccine.gov.sg/ எனும் கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு இணையத்தளத்தை நாடலாம்.
குறுஞ்செய்தி வழி கைபேசிக்கு முன்னதாக அனுப்பப்பட்ட 10 எழுத்துடைய குறியீடு, அடையாள அட்டை எண் ஆகியவை இதற்குத் தேவைப்படும் என்று கூறப்பட்டது.

