சிங்கப்பூர் - இந்தியா இடையேயான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடானது (சீக்கா), இந்திய நாட்டு நிபுணர்கள் எந்த நிபந்தனையும் இன்றி சிங்கப்பூருக்கு வர அனுமதிவழங்கவில்லை என்று அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வசிக்கவும், வேலை செய்யவும் நிரந்தரவாசத் தகுதி அல்லது குடியுரிமை பெறவும் எவரை அனுமதிப்பது என்பதில் முழு உரிமையும் அரசாங்கத்திடம் உள்ளது என்றார் அவர்.
கடந்த 2005ல் கையெழுத்தான சீக்கா உடன்பாடு குறித்து சமூக ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகளாலும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு திரு ஓங் பதிலளித்தார்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) போன்றவர்களை நிபந்தனையற்ற முறையில் இங்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த உடன்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சொல்வதற்கு மாறாக, வேலை அனுமதி வழங்கவும் குடிநுழைவு அனுமதியிலும் அரசாங்கத்துக்கு உள்ள உரிமையை சீக்கா எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றார் அவர்.
சீக்கா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானம் முன்வைக்குமாறு அமைச்சர் கா. சண்முகம் முன்னேற்றக் கட்சியிடம் மே மாதம் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, பொருட்கள், சேவைகளின் விநியோகத்தை எளிதாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே செய்யப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை திரு ஓங் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
குடிநுழைவு தனியாகப் பிரிக்கப்படவில்லை என்றாலோ, குடிமக்களை நடத்துவது தொடர்பான கொள்கை சீக்கா உடன்பாட்டில் சேர்க்கப்பட்டிருந்தாலோ இந்திய ஊழியர்கள் சிங்கப்பூர் ஊழியர்களைப்போல் நடத்தப்படுவதுடன் அவர்கள் தங்குதடையின்றி சிங் கப்பூரில் தங்கி வேலை பார்க்கும் உரிமையைப் பெற்றிருப்பர் என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.
குடிநுழைவு முக்கியமான அம்சமாக தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், குடிமக்கள் கொள்கை சீக்காவிலோ சிங்கப்பூர் செய்துகொண்டுள்ள வேறு எந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலோ இல்லை. மாறாக, ஒப்பந்தத்தின் 9ஆம் பிரிவு தற்காலிகமாக நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கும் விண்ணப்பங்களை விரைவாக, ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் பரிசீலிக்க வகைசெய்கிறது.
அத்துடன், சிங்கப்பூர் வழங்கும் வேலை அனுமதி, நடைமுறையில் இருக்கும் வேலை அனுமதி தொடர்பான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதேபோன்ற கடப்பாடு மற்ற தடையற்ற வர்த்கக ஒப்பந்தங்களிலும் உள்ளது. மேலும், இந்தக் கடப்பாடு உலக வர்த்தக நிறுவனம், சிங்கப்பூர் உட்பட 164 நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலும் உள்ளது என்று திரு ஓங் தெளிவுபடுத்தினார்.
இவற்றுடன், பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் நாடுகள், வெளிநாட்டினர் ஒருவரை வேலைக்கு அமர்த்தும்முன், தகுந்த உள்ளூர்வாசிகள் கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்க சிரமமான நடைமுறைகளை அமல் செய்வதில்லை என்றும் உறுதி கூறுகின்றன. இது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா போன்ற பல நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் காணப்படும் ஒரு பொதுவான கடப்பாடு என்று விளக்கிய அமைச்சர் ஓங், சீக்கா குறித்த முன்னேற்றக் கட்சியின் இரு குற்றச்சாட்டுகளை மறுதலித்தார்.
முதலாவது, இணைப்பு 9Aஇன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 127 தொழில்துறையைச் சேர்ந்த இந்தியர்கள் தாராள அனுமதியின்கீழ் ஓராண்டுக்கு இங்கு வேலைக்கு வரலாம் என்பது. இந்த பட்டியல் எந்தவொரு இந்திய நாட்டினருக்கும் தடையற்ற அனுமதியை வழங்கவில்லை என்றார் அவர்.
"இங்கு பணிபுரிய அனைத்து வெளிநாட்டு நிபுணர்களும் வேலை அனுமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியா உருவாக்கிய இப்பட்டியலை சிங்கப்பூர் அங்கீகரிக்க வேண்டும் என்ப தில்லை. மேலும், பட்டியலில் தொழில்கள் இடம்பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் சிங்கப்பூருடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துள்ள நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கு வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றார் திரு ஓங்.
நிறுவனத்துக்குள் இடமாற்றம் (ஐசிடி) பெறுபவர்கள் இந்தியா விலிருந்து சிங்கப்பூருக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி பணிபுரிய வரலாம் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லை. இவ்வாறு நிறுவனத்திற்குள் இடமாற்றம் பெறுபவர்களுக் இஙகு வேலை செய்ய அனுமதி பெற வேண்டும்.
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து இவ்வாறு நிறுவனத்துக்குள் இடமாற்றம் பெற்று சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து இவ்வாறு வந்தவர்கள் 500 பேர் வரைதான் இருப்பார்கள். எம்பிளாய்மென்ட் பாஸ் பெற்றவர்களில் இவர்கள் 0.3 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் என்றார் அவர்.
"பொதுவாக சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தக உடன்பாடுகள், குறிப்பாக சீக்கா பற்றிய பொய்யுரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நம்புகிறேன்," என்று தமது உரையில் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றச் செய்திகள்: பக்கம் 2 & 3

