மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடியின் கட்டளைக்கு கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இணங்கவில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நாடு இப்போதுள்ள நிலைமையில் ஆதரவைத் திரும்பப் பெறுவது நியாயமான முடிவாக இராது என்று கூறி, தாம் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் பலரும் அம்முடிவை எதிர்த்ததாக திரு இஸ்மாயில் சொன்னார் என்று மலேசியாவின் பெரித்தா ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும் கொவிட்-19 பரவலால் சிரமத்தை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மலேசியத் துணைப் பிரதமருமான திரு இஸ்மாயில் கூறினார்.
பிரதமர் முகைதீன் தலைமையிலான பெரிக்கத்தான் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது என்று 2020 அம்னோ பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆயினும் அதை இப்போதே செய்ய வேண்டும் எனக் கருதக்கூடாது என்றும் விளக்கினார்.
"சரியான நேரத்தில் நாம் செயல்பட வேண்டும். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பிரதமருக்கு முழுமையான ஒத்துழைப்பு தர விரும்புகிறோம் என்ற எங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை," என்றார் திரு இஸ்மாயில்.
பிரதமருக்கான ஆதரவு தொடர்பில் ஒவ்வொரு எம்.பி.க்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெரிக்கத்தான் கூட்டணியின் ஆகப் பெரிய கட்சியான அம்னோ, அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. அதனால், பிரதமர் முகைதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.

