இந்தியாவில் தென்கிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் ஒரே நாளில் 68 பேர் இறந்துவிட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 20 பேர் மாண்டுவிட்டனர். அவர்களில் கோட்டா, தோல்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு குழந்தைகளும் அடங்குவர். அத்துடன், மின்னல் தாக்கியதில் 21 பேர் கடுமையான காயமுற்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, மழை பெய்தபோதும் அதைப் பொருட்படுத்தாது ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆம்பர் கோட்டைக்கு அருகே அமைந்து உள்ள பார்வைக் கோபுரத்தில் சுற்றுப்பயணிகள், உள்ளூர்வாசிகள் எனப் பலர் திரண்டிருந்தனர்.
ஆர்வத்துடன் தங்களின் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 11 பேர் உடல் கருகி மாண்டுபோயினர். இதையடுத்து, பீதியில் கோபுரத்திலிருந்து குதித்ததில் பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், காயமடைந்து சுயநினைவின்றிக் கிடந்தவர்களை மீட்டு, சவாய் மான் சிங் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கிட்டத்தட்ட அரைமணி நேர இடைவெளியில், அக்கோபுரத்தின்மீது இருமுறை மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்டது.
மாண்டவர்களின் குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அவர்களுக்குத் தலா ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
இதனிடையே, பிரயாக்ராஜில் 14 பேர் உட்பட உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 41 பேர் உயிர் இழந்தனர். அவர்களில் பலரும் பெண்கள், குழந்தைகள் எனக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்தினர்க்குத் தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் மழைக்கும் மின்னலுக்கும் கால்நடைகளைப் பறிகொடுத்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலும் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி எழுவர் மாண்டுவிட்டனர்.
பிரதமர் மோடி இரங்கல், உதவி
இப்படி ஒரே நாளில் 68 பேர் மின்னல் தாக்கி இறந்தது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலையும் டுவிட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாண்டோரின் குடும்பத்தார்க்குத் தலா இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்தோர்க்குத் தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார்.
இதனிடையே, வடஇந்தியாவின் பல பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கன அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் இந்திய வானிலை மையம் கணித்திருந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

