அரசியலுக்கு வரப்போவதில்லை: ரஜினி உறுதி

அரசியலுக்கு வரப்போவதில்லை: ரஜினி உறுதி

1 mins read
Google News Preferred Icon

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, முன்புபோல ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் புதுக்கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பேன் என முதலில் கூறிய ரஜினி, பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனப் பின்வாங்கிவிட்டார். ஆயினும், அவர் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப்பின் சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ரஜினி ஆலோசனை செய்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், "நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி, நிலை குறித்து விளக்க வேண்டியது என் கடமை. கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல சார்பு அணிகளை உருவாக்கினோம். காலச்சூழலால் அது சாத்தியப் படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, சார்பு அணிகள் ஏதுமின்றி, மக்கள் நலப்பணிகளுக்காக முன்பு போல ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும்," என்று தெரிவித்திருக்கிறார்.