முன்னாள் குற்றவாளிகளைத் தொடர்ந்து சரியான வாழ்க்கைப்பாதையில் நிலைபெறச் செய்வதற்கான உத்திகள் குறித்த தங்களது கருத்தைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் இணைய கருத்தரங்கு, இன்று தொடங்கியது.
'கேர்' எனப்படும் முன்னாள் குற்றவாளிகளின் சீர்த்திருத்தத்திற்கான சமூக செயல் கட்டமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் குற்றவாளிகளுக்கான மறுவேலை வாய்ப்பு, அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவு, முன்னாள் குற்றவாளிகளிடையே வெவ்வேறு வயது பிரிவினரின் தேவைகள் உள்ளிட்டவற்றைப் பற்றி கலந்துரையாடல் செய்யப்படும்.
கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்புகளைத் தாண்டிய ஆதரவை வலுப்படுத்தும் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடினார்.
"கடந்த ஆண்டு அனைவருக்குமே மிகவும் சவாலாக இருந்தது. முன்னாள் குற்றவாளிகளும் அவர்களது குடும்பங்களும் சவாலை எதிர்கொண்டோரில் அடங்குவர்," என திருவாட்டி டியோ கூறினார்.

