என்றும் இல்லாத புதிய உச்சமாக நேற்று மலேசியாவில் 11,079 புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒரே நாளில் ஐந்து இலக்கத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முன்னதாக இம்மாதம் 10ஆம் தேதியன்று 9,353 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதே உச்சமாக இருந்தது. பதிவான புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களில் ஆக அதிகமாக, 5,263 கொவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவாகியிருந்தன.
மலேசியா ஜூன் ஒன்று முதல் முடக்கநிலையில் இருந்து வந்தாலும் அதன் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் திணறுகிறது.
இதுவரை மலேசியாவில் 855,949 பேருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிகத் தொற்றுச் சம்பவங்களின் விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக அது விளங்குகிறது.
இருப்பினும், தடுப்பூசி போடும் விகிதமும் மலேசியாவில் அதிகம். அதன் 32 மில்லியன் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டினருக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி ஒரு முறையாவது போடப்பட்டுவிட்டது.
தடுப்பூசி நிலையத்தின் 204 பணியாளர்களுக்கு கொவிட்-19
இதற்கிடையே சிலாங்கூர் தடுப்பூசி நிலையம் ஒன்றில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களும் தொண்டூழியர்களும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அந்நாட்டு தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஷா அலாம் பகுதியில் உள்ள அந்தத் தடுப்பூசி நிலையத்தில் முதலில் இரு தொண்டூழியர்களிடம் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது.
தடுப்பூசி நிலையத்தைச் சேர்ந்த 453 பணியாளர்கள் மற்றும் தொண்டூழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
அதையடுத்து சுத்தம் செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள, தடுப்பூசி நிலையம் நேற்று ஒரு நாள் மூடப்பட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களுக்குப் பதிலாக புதிய குழு தடுப்பூசி நிலையத்தில் அமர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், அதைப் பரப்பும் சாத்தியம் குறைவு என்றார் அமைச்சர் கைரி.

