சிறுவனின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை: சுகாதார அமைச்சு

சிறுவனின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை: சுகாதார அமைச்சு

1 mins read
6e1ab96c-7b59-4e58-8a16-120ca85074f7
படம்: சுகாதார அமைச்சு/ஃபேஸ்புக் -

அண்மையில் 16 வயதுச் சிறுவன் உயிரிழந்ததற்கும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று சுகாதார அமைச்சு ஃபேஸ்புக் வழியாக நேற்று (ஜூலை 14) தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ்அப் குழுக்களில் இடம்பெற்ற ஓர் இரங்கல் செய்தி குறித்தும் தடுப்பூசியால் ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகளால் அந்தப் பதின்ம வயதுப் பையன் இறந்துவிட்டான் என்ற ஊகத்திற்கு இட்டுச்சென்றது குறித்தும் தான் அறிந்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

அதனால்தான் அந்தப் பதிவுகளிலும் உரையாடல்களிலும் குறிப்பிட்டுள்ளதுபோல அந்தச் சிறுவன் மாண்டதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று தான் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, வேறொரு சம்பவம் ஒன்றில் எடைக்கருவிகள் கொண்டு கடுமையாக உடற்பயிற்சி செய்தபிறகு 16 வயது சிறுவன் ஒருவரின் இதயத்துடிப்பு திடீரென நின்றுவிட்டதற்கான (cardiac arrest) காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இம்மாதம் 7ஆம் தேதி அமைச்சு தெரிவித்து இருந்தது. கடும் உடற்பயிற்சிக்குப் பிறகு அவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட கொரோனா தடுப்பூசி சாத்தியமான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் விளக்கமளிக்கக் கோரி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அமைச்சைத் தொடர்புகொண்டது.

"சான்று ஏதும் இல்லாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்துகிறோம். அப்படிச் செய்வது, ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் அச்சிறுவனின் குடும்பத்திற்கு மேலும் வருத்தமளிக்கக்கூடும் அல்லது பொதுமக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்திவிடலாம்," என்று தனது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்