புதுடெல்லி: இந்தியா முழுவதும் மீண்டும் கொவிட்-19 தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் அவற்றிடம் தடுப்பூசிகள் இல்லை என்று கூறியுள்ளன.
இதற்கிடையே இதுவரை நாடு முழுவதும் 390 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மாநிலங் களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும் தினமும் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 மில்லியனிலிருந்து 4 மில்லியனுக்கு குறைந்துள்ளது. தடுப்பூசி மருந்து இல்லாததால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 1.5 மில்லியன் தடுப்பூசி களைப் போடும் திறன் இருந்த போதும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அப்பணி முடங்கியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 3 மாதங்களில் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தெலுங்கானா தடுப்பூசி நிலையங்களில் சில நாளாக கோவேக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லை. கேரளாவிலும் தடுப்பூசித் தட்டுப்பாடு பெரும்பிரச்னையாக உள்ள தாக அதிகாரிகள் கூறினர். புதுடெல்லியில் தடுப்பூசி கையிருப்பு இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்றனர் அதிகாரிகள். தெரிவித்தனர்.
அதே போல் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக நிர்ணயித்தது மத்திய அரசாங்கம். அதற்கு தினமும் குறைந்தபட்சம் 8 மில்லியன் தடுப்பூசிகள் போடவேண்டும். தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு அந்த முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தடுப்பூசி எங்கே? ராகுல் கேள்வி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி 'தடுப்பூசி எங்கே' என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ''டெல்லி உட்பட பல மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை எதிர்க்கொண்டு உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு மறுத்துள்ளது. சொல்லாட்சி மட்டும்தான். ஆனால் தடுப்பூசிகள் இல்லை'' என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக அளித்த வாக்குறுதி 'வெற்று பெருமை' மற்றும் 'தவறான வாக்குறுதி' என்றார்.
மக்களை பயமுறுத்துகிறார்கள்
பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எழுந்து புகார் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டிவியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவியில், 'தடுப்பூசி இருப்பு நிலை குறித்து, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். மக்களிடையே பீதியை ஏற்படுத்த மட்டுமே பயனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஜூன் மாதம் மட்டும் 11.46 கோடி டோஸ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, ஜூலை மாதத்தில் 13.50 கோடியாக உயரும்' என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா தடுப்பூசி இந்தியா வருவதில் சிக்கல்
அமெரிக்க அதிபர் பைடன் தங்களது கையிருப்பில் உள்ள 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பாகிஸ்தான், நேபாள், பூட்டான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு சட்ட ரீதியாக அனுமதி கொடுக்காததால், அமெரிக்க தடுப்பூசிகள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

