கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு புதிய உச்சமாக 13,215 புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் நேற்று 13,000ஐத் தொட்டன.
கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 880,782 என்று அந்நாட்டு சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டார்.
சிலாங்கூரில் ஆக அதிகமாக 6120 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. அடுத்த நிலைகளில் நெகிரி செம்பிலானில் 1,603 பேருக்கும் கோலாலம்பூரில் 1,499 பேருக்கும் புதிதாகத் தொற்று கண்டது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவ மனைகள், கிருமிப் பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிலையங்கள் ஆகியவை கூட்டநெரிசலால் திணறு வதைக் காட்டின.
தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதே தொற்று எண்ணிக்கை கூடியதற்குக் காரணம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் மருந்தகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா நேற்று கூறினார். தொற்று அதிகம் உள்ள சிலாங்கூரில் அது முதலில் நடப்புக்கு வரும் என்றார் அவர்.
இவ்வேளையில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களுக்கு கட்டுப்பாட்டுத் தளர்வு களைப் பற்றி அரரசாங்கம் பரி சீலித்து வருவதாக பிரதமர் முஹைதீன் யாசின் கூறியுள்ளார்.
நீண்ட பொது முடக்கத்துக்குப் பின்னர் நாடு மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் மேற்கொள்ளவும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வருகின்றன.
தேசிய மீட்சித் திட்டம் இவ்வாண்டு இறுதியில் வெளியிடப்படும் என்றார் திரு முஹைதீன்.
மலேசியாவின் தடுப்பூசித் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரே நாளில் 421,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதை மீட்சிக்கான நல்ல அறிகுறி எனக் கூறினார். கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

