இந்திய அரசு இதுவரை இல்லாத வகையில் ரூ.14,505 கோடி (S$2.36 பில்லியன்) மதிப்பில் 660 மில்லியன் கொவிஷீல்டு, கொவேக்சின் தடுப்பூசிகளை வாங்கவிருக்கிறது.
அத்துடன், ஹைதராபாத்தைச் சேர்ந்த 'பயோலாஜிக்கல் இ' நிறுவனத்திடமிருந்து 300 மில்லியன் 'கொர்பேவேக்ஸ்' தடுப்பூசிகளைப் பெறவும் முன்பணம் தரப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மேலும் அதிகரித்து, தடுப்பூசிப் பற்றாக்குறை நிலவினால் பல மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று அரசாங்க அதிகாரிகளும் சுகாதார வல்லுநர்களும் எச்சரித்ததை அடுத்து, இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆகஸ்ட்-டிசம்பர் காலகட்டத்தில் 135 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட இந்தியா இலக்கு கொண்டு இருக்கிறது.
இவ்வேளையில், கொரோனா பாதிப்பு மிகுதியாக இருக்கும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
"கடந்த வாரம் புதிய பாதிப்புகளில் 80 விழுக்காடும் உயிரிழப்பில் 84 விழுக்காடும் இந்த ஆறு மாநிலங்களில்தான் பதிவாயின," என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'பரிசோதனை, தடமறிதல், மருத்துவம், தடுப்பூசி' என்ற உத்தியைக் கையாளுமாறு அம்மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தினார்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,949 பேரை கொரோனா தொற்றிவிட்டதாகவும் 542 பேர் இறந்துவிட்டதாகவும் இந்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது.

