மீன் விற்பனையாளர்களுக்குப் பரிசோதனை

மீன் விற்பனையாளர்களுக்குப் பரிசோதனை

3 mins read
ecb7c17c-0dcf-4df9-a7cf-0948bbd5efb5
தேக்கா நிலையத்தில் உள்ள ஈரச் சந்தையில் நேற்று மீன் வாங்கத் திரண்டிருந்த வாடிக்கையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் இரு வாரங்களுக்கு மூடல்; மீன் கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்

ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­தில் புதிய கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் உரு­வாகியிருப்­ப­தை அடுத்து, எல்­லாச் சந்­தை­க­ளி­லும் உள்ள மீன்­க­டைக்­கா­ரர்­கள் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அந்த மீன்­பி­டித் துறை­மு­கத்­தில் இருந்து ஹோங் லிம் சந்தை, உணவு நிலை­யத்­திற்கு கொரோனா பர­வி­விட்­ட­தால், அது மற்ற சந்­தை­க­ளுக்­கும் பர­வும் அபா­யம் உள்­ளது என்று அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

"முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக, எல்­லாச் சந்­தை­க­ளி­லும் உள்ள மீன்­க­டைக்­கா­ரர்­கள் எங்­க­ளது பரி­சோ­தனை நிலை­யங்­களில் சோதனை செய்­து­கொள்ள தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­து­டன் சேர்ந்து ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், அவர்­கள் தொடர்ந்து தங்­களது உடல்­நி­லை­யைக் கண்­காணித்­துக்­கொள்ள ஏது­வாக ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்," என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

இம்­மா­தம் 3ஆம் தேதி­யில் இருந்து 16ஆம் தேதி­வரை ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­தில் பணி­யற்­றிய அனை­வ­ரும் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர்.

அதே கால­கட்­டத்­தில் அந்­தத் துறை­மு­கத்­திற்கு வந்து சென்ற அனை­வர்க்­கும் சிறப்­புப் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் அமைச்சு தெரி­வித்தி­ருக்­கிறது.

கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தை­ய­டுத்து, கொரோனா பர­வலை முறி­ய­டிக்­க­வும் முழு­மை­யான தூய்­மைப் பணி­களை மேற்­கொள்­ள­வும் ஏது­வாக நேற்று முதல் இம்­மா­தம் 31ஆம் தேதி­வரை ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கம் மூடப்­பட்டு இ­ருக்­கும்.

இது மீன் விநி­யோ­கிப்­பா­ளர்­களை­யும் சந்­தை­களில் மீன்­கடை வைத்­துள்­ளோ­ரை­யும் பாதித்­துள்­ளது. இத­னால் வாடிக்­கை­யா­ளர்­களும் சற்­றுக் கவ­லை­ய­டைந்­து உள்­ள­னர். புதிய பணிப்­பு­களை (ஆர்­டர்) எடுக்­கப்­போ­வ­தில்லை என்று மீன் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் சமூக ஊட­கம் வாயி­லாக அறி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து, வாடிக்­கை­யா­ளர்­கள் குவிந்­த­தால் சந்­தை­யி­லுள்ள மீன்­ க­டை­களில் நேற்று விரை­வா­கவே மீன்­கள் விற்­றுத் தீர்ந்­தன.

தேக்கா நிலை­யத்­தி­லுள்ள ஈரச் சந்­தை­யில் தம் தாயா­ரு­டன் சேர்ந்து '68 பிகே' மீன்­க­டையை நடத்­தி­வரும் குமாரி கிஷா, 26, தமது கடைக்குப் பெரும்­பா­லும் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­தி­லி­ருந்து மீன்­கள் வரு­வ­தால் அடுத்த இரு வாரங்­களுக்­குத் தாம் கடையை மூட வேண்­டியிருக்­கும் என்று வருத்­தத்­து­டன் கூறி­னார்.

தங்களுக்கு மீன் வழங்­கும் நிறு­வ­னம் வேறு இடங்­களில் இருந்து மீன் இறக்­கு­மதி செய்­வதால் பாதிப்பு இராது என்­றார் 'தி பனானா லீஃப் அப்­போலா' உணவகங்களின் உரி­மை­யா­ளர் திரு சி.சங்­க­ர­நா­தன்.

ஆனால், மீன் விநி­யோ­கம் பாதிக்­கப்­படும் என்று தங்­க­ளுக்கு மீன் வழங்­கும் நிறு­வ­னம் தெரி­வித்­த­தாக காயத்ரி உண­வகத்­தின் இயக்­கு­நர் திரு ச.மகேந்­தி­ரன் சொன்­னார்.

அதே­போல, தங்­க­ளுக்­கும் பாதிப்­புண்டு என்­றும் அத­னால் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க வேறு மீன் விநி­யோ­கிப்­பா­ளர்­களை அணு­கப்­போ­கிறோம் என்றும் முத்­துஸ் கறி உண­வ­கத்­தின் இயக்கு­நர் திரு சீனிவாசன் அய்யா­கண்ணு கூறி­னார்.

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­திற்கு வெளியே இயங்­கும் 'நந்­த­னாஸ்' உண­வ­கத்­தின் உரி­மை­யாளர் திரு சிவ­வ­டி­வேல், "எங்­க­ளுக்கு மீன் வழங்­கும் நிறு­வ­னம் தற்­கா­லி­க­மாக வேறு இடங்­க­ளில் இ­ருந்து மீன்­க­ளைக் கொண்­டு­வர முயல்­கிறது. அத­னால், அவற்றைச் சற்று கூடு­தல் விலைகொடுத்து வாங்க வேண்­டி­யி­ருக்­க­லாம் என எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார்.

சமூகத்தில் மேலும் 60 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக

68 பேருக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதிப் படுத்தப்பட்டது. அவர்களில் 60 பேர் சமூகத்தில் உள்ளோர் என்றும் 29 பேர் கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும் சுகாதார அமைச்சு கூறி இருக்கிறது. அவர்களில் 33 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். மற்ற 22 பேரைக் கிருமி தொற்றியது கண்காணிப்புப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்தோரில் எண்மருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 62,981ஆனது.