சிங்கப்பூரில் புதிதாக 88 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றில் 23 பேர் கேடி கிருமித்தொற்றுடன் இணைக்கப்பட்டவர்கள். 37 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்தவர்கள்.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட 88 பேரில் முப்பது பேர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெவே தனிமையில் வைக்கப்பட்டவர்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடாத 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் அடங்குவதாகவும் அவர்கள் கடுமையான உடல் உபாதையை எதிர்நோக்கும் அபாயத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே மொத்தம் 39 பேர், சட்டவிரோதமான கேளிக்கைக் கூடங்களில் பிறருடன் பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆக அண்மைய போலிஸ் சோதனையின் மூலம் தெரிய வந்தது. கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் கடந்த வாரம் உருவானதை அடுத்து இந்த விவரம் வெளிவந்துள்ளது.
உரிமம் இல்லாமல் மதுபானத்தை விநியோகம் செய்ததற்காக 24 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். செலிகி ரோடு, தாகூர் லேனிலுள்ள அந்தக் கடையின் உரிமையாளர்கள் இந்த மூன்று ஆடவர்கள் என நம்பப்படுகிறது.
16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 36 பேர், பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளுக்கு இணங்காததற்காக விசாரிக்கப்படுகின்றனர். நேற்று (ஜூலை 17) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மது போத்தல்கள், 'கரோக்கே' இயந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

