சிங்கப்பூரில் புதிதாக 88 பேருக்கு கிருமித்தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 23 பேர் கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடனும் 37 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் கிருமித்தொற்றுக் குழுமத்துடனும் தொடர்பு உடையவர்கள் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட 88 பேரில் 30 பேர் கிருமி தொற்றியோருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 41 சம்பவங்கள் மற்ற சம்பவங்களுடன் தொடர்புடை யவை. 17 மற்ற தொற்றுகளுடன் தொடர்பில்லாதவை.
சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடாத 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் நால்வர் அடங்குவதாகவும் அவர்கள் கடுமையான உடல் உபாதைக்கு உட்படக்கூடிய அபாயத்தில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டில் இருந்து வந்தோரில் நால்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் இல்லத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில், நேற்று 92 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகி உள்ளன. இதையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 63,073 ஆனது.
இதற்கிடையே, கிருமித்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நிர்வகிக்கப்படும் அல்லது நியமிக்கப்பட்ட சந்தைகளில் செயல்படும் அனைத்து மீன், கடலுணவு கடைக்காரர்களும் நேற்று கடை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.
குறிப்பிட்ட பரிசோதனை நிலையங்களில் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள கடைக்காரர்களுக்கு சுகாதார அமைச்சிடம் இருந்து குறுந்தகவல் அனுப்பப்படும். தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் சுகாதார அமைச்சும் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்ற மீன் விற்பனையாளர்களிடையே கிருமித்தொற்று பரவியதை அடுத்து இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை விளக்கியது.
புதிய மீன்கள் அல்லது கடலு ணவுகளை விற்காத மற்ற கடைக்காரர்கள் தொழிலைத் தொடரலாம்.
அத்துடன், சந்தைகள், உணவு மையங்களில் உள்ள அனைத்து கடைக்காரர்களையும், உதவியாளர்களையும் கிருமி பரிசோதனை செய்துகொள்ள வாரியமும் அமைச்சும் ஊக்குவிக்கின்றன.
சந்தைகளிலும் உணவு மையங் களிலும் கூட்டத்தைத் தவிர்க்குமாறு வருகையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட புதிய மீன், கடல் உணவுக் கடைக்காரர்கள் அங் மோ கியோவில் உள்ள முன்னாள் டா சியாவ் தொடக்கப்பள்ளி, பாசிர் ரிஸ் முன்னாள் கோரல் தொடக்கப்பள்ளி, முன்னாள் பிடோக் நார்த் உயர்நிலைப் பள்ளி, முன்னாள் பீஷான் பார்க் உயர்நிலைப் பள்ளி, முன்னாள் ஷூகுன் உயர்நிலைப் பள்ளி ஆகிய பரிசோதனை நிலையங்களுக்கும் செல்லலாம்.
எதிர்மறையான பிசிஆர் சோதனை முடிவைப் பெற்றதும், அவர்கள் உடனடியாக வர்த்தகத்தை தொடங்கலாம்.
புதிய மீன், கடல் உணவுக் கடைக்காரர்களுக்கு சுய பரிசோதனை செய்துகொள்ள ஆன்டிஜன் விரைவு சோதனை (ஏஆர்டி) கருவிகளும் வழங்கப்படும்,
கிருமித்தொற்று சம்பவத்துடன் தொடர்புகொண்ட ஏழாம் நாளில் அவர்கள் சுயமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 14வது நாளில் அவர்கள் நியமிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்களில் மற்றொரு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நிர்வகிக்கப்படும் அல்லது நியமிக்கப்பட்ட அனைத்து உணவங்காடி நிலையங்களிலும் சந்தைகளிலும் உள்ள கடைக்காரர்களுக்கும் உதவியாளர்களுக்கும் கொவிட்-19 பரிசோனை நடத்த தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. பரிசோதனை விவரங்கள் குறித்து இந்தக் கடைக்காரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

