சட்டவிரோதமான கேளிக்கைக் கூடங்களில் மொத்தம் 39 பேர் பிறருடன் பழகி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதிதாக கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட போலிஸ் சோதனை நடவடிக்கையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
உரிமம் இல்லாமல் மதுபானம் விநியோகம் செய்ததற்காக 24 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். இவர்கள் சிலிகி ரோடு, தாகூர் லேனிலுள்ள கடைகளின் உரிமையாளர்கள் என நம்பப்படுகிறது.
16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் 36 பேர், பாதுகாப்பு தூர இடைவெளி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காததற்காக விசாரிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மது போத்தல்கள், 'கராவோக்கே' இயந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த விற்பனை நிலையங்களில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பொதுப் பொழுதுபோக்கும் மதுபானமும் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
"நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தூர இடைவெளியை தீவிரமாகப் பின்பற்ற பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று போலிஸ் கூறியது.

