கேடிவி கேளிக்கை இசைக்கூடம், ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றில் உருவாகியுள்ள புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவ சியத்தை நினைவூட்டுகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தொற்று ஏற்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் தடுப்பூசி போடுவது அவசியம் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நேற்று கூறினார்.
தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், அங் மோ கியோவிலுள்ள சோங் பூன் ஈரச்சந்தை, உணவு மையத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கிருமி பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
ஜூலை 3ஆம் தேதி முதல் அந்த ஈரச்சந்தை, உணவு மையத்துக்குச் சென்றவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 தொற்று சம்பவங்கள் உள்ள 12 ஈரச்சந்தைகளில் அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 453Aல் உள்ள அந்த ஈரச்சந்தையும் ஒன்று. இது ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.
"நம்மை பாதுகாக்க மிக முக்கியமான வழி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான்," என்றார் பிரதமர் லீ. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்துக்குள் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடும் இலக்கை எட்டும் வகையில் சிங்கப்பூர் செயல்படுகிறது என்றார் அவர்.
"அதேநேரத்தில், முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, பாதுகாப்பு தூர இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறை களைக் கடைப்பிடியுங்கள். இது கிருமிப் பரவலை மெதுவாக்கும். கேடிவி, ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் போன்ற தொற்றுக் குழுமங்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்," என்றார் திரு லீ.
இந்த இடங்களுக்கும் பாதிக்கப்பட்ட ஏனைய ஈரச்சந்தைகளுக்கும் அண்மையில் சென்றவர்களை கிருமி பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.பாதிக்கப்பட்ட ஈரச்சந்தை, உணவு மையங்களின் பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.

