இன நல்லிணக்க நாளில் கல்வி அமைச்சர் சான் வலியுறுத்து
ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற 13 வயது மாணவனின் இறுதிச்சடங்கில் பல சமயக் குழுவினரும் கலந்துகொண்டு அந்த மாணவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
மாணவர்களின் நல்வாழ்விற்காகவும் அவர்கள் வழிபட்டதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமையைப் பலப்படுத்துவது என்ற நம்பிக்கையில்தான் சிங்கப்பூர் நாடு உருவாக்கப்பட்டது என்பதை சிங்கப்பூரர்கள் இந்த இன நல்லிணக்க நாளில் நினைவு கூரவேண்டும் என்றும் திரு சான் வலியுறுத்தினார்.
"இனம், சமயம் பாராமல் எல்லாரும் ஐக்கியமாக மனதைத் தொடும் அளவிற்குக் கலந்துகொண்டு வழிபட்டது சோகமான இருட்டில் வெளிப்படும் வெளிச்சமாக இருக்கிறது.
"எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சக சிங்கப்பூரர்கள் என்ற புரிந்துணர்வை அது புலப்படுத்துவதாக இருக்கிறது," என்று இன நல்லிணக்க நாளைக் குறிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் 1964ல் நடந்த இனக் கலவரங்கள் பற்றியும் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு நினைவூட்டுவதற்காக 1998 முதல் கல்வி அமைச்சு ஜூலை 21ஆம் தேதியை இன நல்லிணக்க நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. அதையொட்டி பள்ளிக்கூடங்களும் சமூக அமைப்புகளும் அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அந்த நாளை நினைவுகூர்ந்தனர்.
"பொதுவான பல இன சிங்கப்பூரர் என்ற அடையாளம் என்பது, பெரும்பான்மை கலாசாரம், சிறுபான்மையினத்தவர்களின் கலாசாரத்தைக் கிரகித்துக் கொள்வது அல்ல.
"நாம் நமது சொந்த அடையாளங்களைக் கைவிட்டுவிடுவதும் அதன் பொருளாகாது. பதிலாக அது நம்முடைய வளமிக்க பன்மய அடையாளங்களில் பதிந்து இருக்கும் அடிப்படை அம்சங்களு டன் கூடிய பொதுவான நன்னெறிகளைக் கொண்டு அனைவரும் பகிர்ந்துகொள்ளக்கூடிய, எதிர்கால கண்ணோட்டத்துடன் கூடிய அடையாளத்தைப் பலப்படுத்துவதே ஆகும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஒருவர் மற்றொருவருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் பள்ளிக்கூடங்களும் சமூகங்களும் ஐக்கியமாக இருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தின் முதல்வர் ரெவரண்ட் ஃபாதர் டாக்டர் அட்ரியன் டான்கரின் வழிபாடு ஒன்றை இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் சுட்டிக்காட்டினார்.
"நாம் வெளிப்படுத்தும் கருணையும் ஆதரவும் நாம் நம்முடைய வேறுபாடுகளை எல்லாம் கடந்து பொதுவில் அதிக அக்கறையுடன் இருக்கிறோம். நம்மை பிரிப்பதைவிட ஒன்று சேர்க்கவே அதிக அம்சங்கள் இருக்கின்றன என்பதையே காட்டுகின்றன," என்று திரு மாலிக்கி குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்படும் இன நல்லிணக்க நாள் மேலும் முக்கியத்துவம் பெறுவதாக கல்வித் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்தார். தொற்று தொடங்கியது முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெவ்வேறான இன, சமய குழுக்களும் முன்வந்து இருப்பதை அவர் சுட்டினார்.
நம் முன்னோடிகளும் முதியவர்களும் பல ஆண்டு காலமாக படாதபாடுபட்டு பல இன, பல கலாசார சமூகத்தை எப்படி பலப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை அண்மைய இனவாதச் சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இன நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் பள்ளிக்கூடங்கள் பிணைப்பு மிக்க சிங்கப்பூரை வலுப்படுத்துவதில் மாணவர்கள் ஆற்றக்கூடிய பணிகளில் ஒருமித்த கவனம் செலுத்தின. பரஸ்பர மரியாதை, நல்லிணக்கம் முதலான நன்னெறிகளையும் அவை வலியுறுத்தின.

