இந்தியாவில் 2020 ஜனவரிக்கும் 2021 ஜூன் மாதத்திற்கும் இடையில் கொவிட்-19 காரணமாக ஏறத்தாழ 4.9 மில்லியன் பேர் (ஏறத்தாழ அரை கோடி) மரணமடைந்திருக்கக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு பேரிடர் சம்பவம் அங்கு இதுவரை நிகழ்ந்ததே இல்லை என்று அந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 காரணமாக 414,000க்கும் மேற்பட்டவர்கள் மாண்டு இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜூன் வரை பல காரணங்களாலும் மரணமடைந்தவர்களை அந்த ஆய்வு உள்ளடக்கி இருக்கிறது.
வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் 'உலக நிலவரங்களுக்கான மையம்' என்ற அமைப்பு அந்த ஆய்வை வெளியிட்டு உள்ளது.
உருமாறிய கொவிட்-19 டெல்டா கிருமி வேகமாக பரவியதால் மே மாதம் மட்டும் குறைந்தபட்சம் 170,000 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மரண எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கலாம் என்று அந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
இதனிடையே, அந்த அறிக்கை பற்றி இந்தியாவின் சுகாதார அமைச்சு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு கொவிட்-19 எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாகவும் இருந்தாலும் இன்னமும் 400 மில்லியன் பேர் அந்தக் கிருமியால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் எச்சரித்து உள்ளது.
இந்தக் கழகம் ஜூன், ஜூலை மாதத்தில் தேசிய கொவிட்-19 எதிர்ப்பு ஆய்வை நடத்தியது. அந்த நான்காவது ஆய்வு முடிவில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
21 மாநிலங்களில் 70 மவாட்டங்களில் பொதுமக்கள் 28,975 பேரையும் 7,252 சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் சுகாதார ஊழியர்களில் 10ல் ஒருவர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவருவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கிடுகிடுவென குறைந்துவந்த கொவிட்-19 தொற்று மெல்ல அதிகரிப்பதாகத் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாகவும் 3,998 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை தெரிவித்தது. நாட்டில் 407,170 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

