சிம்ஸ் அவென்யூவில் உள்ள நான்கு புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரும் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அந்த புளோக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா கிருமிக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
கேலாங் சிராய் சந்தைக்கு அருகே அமைந்துள்ள புளோக் 842, 844, 846, 848 ஆகிய நான்கு புளோக்குகளில் கொரோனா பரவலுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாகச் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அத்துடன், எந்த வழியில் அது பரவி இருக்கலாம் என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை முதல் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றவர்கள், விருப்பப்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்தக் கட்டாயப் பரிசோதனை நடவடிக்கை, 3, கேலாங் சிராய் எனும் முகவரியில் அமைந்துள்ள கூடாரத்தில் நேற்று தொடங்கியது. இன்றும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை அங்கு பரிசோதனை செய்துகொள்ளலாம்.
"எவர்க்கேனும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அமைச்சு அவரைத் தனிமைப்படுத்தும். சமூகத்தில் கொரோனா மேலும் பரவுவதைத் தடுக்க, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 6ஆம் தேதி முதல் கடந்த செவ்வாய்க்கிழமைவரை அந்த புளோக்குகளுக்குச் சென்று வந்தோரும் அவற்றில் குடியிருப்போருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரும் விருப்பப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். சமூகத்தில் அறிகுறி இல்லாத் தொற்றுகளைக் கண்டறிய இது உதவும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
"அவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கிறோம்," என்று அமைச்சு கூறியுள்ளது.
அப்படி விருப்பத்துடன் முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம். அவர்கள் குறிப்பிட்ட வட்டாரப் பரிசோதனை மையங்களிலும் 3, கேலாங் சிராயில் அமைந்துள்ள கூடாரத்திலும் இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
பரிசோதனைக்குச் செல்லும்போது குடியிருப்பாளர்கள் தங்களது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்காக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அமைச்சு கூறியது.
பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் முடிந்த அளவிற்கு சமூகத்தில் ஒன்றுகூடுவதைக் குறைத்துக்கொள்ளும்படி அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
பரிசோதனைக்கு முன்பதிவு செய்துகொள்ளவும் அல்லது மாற்றுப் பரிசோதனை மையங்கள் குறித்துக் கூடுதல் தகவல் தேவைப்பட்டாலும் https://go.gov.sg/sims-ave-appt என்ற இணையப் பக்கத்தை நாடலாம் அல்லது 1800-333-9999 என்ற எண்ணில் அழைக்கலாம்.
சமூகத்தில் மேலும் 162 பேர் பாதிப்பு
உள்ளூரில் மேலும் 162 பேரை கொவிட்-19 கிருமி தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 87 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள். இதையடுத்து, அந்தக் குழுமத்தில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 541ஆக உயர்ந்துவிட்டது. கேடிவி குழுமத்தில் மேலும் ஐவரை கொரோனா தொற்ற, அந்தக் குழுமத்தில் இதுவரை மொத்தம் 220 பேர் பாதிக்கப்பட்டு விட்டனர். உள்ளூரில் புதிதாக பாதிக்கப்பட்ட 162 பேரில்
59 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பு உடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். தொடர்பிருந்த வகையில் மேலும் 51 பேர் பாதிக்கப் பட்டிருப்பது கண்காணிப்புப் பரிசோதனைகள்மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்பில்லாத வகையில் 52 பேரை கொரோனா தொற்றிவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. பாதிக்கப் பட்டவர்களில் அறுவர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் இருமுறை அல்லது ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். வெளிநாட்டில் இருந்து வந்தோரில் எண்மரை கொரோனா தொற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 170 பேருடன் சேர்த்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 63,791 பேராக உயர்ந்துவிட்டது.

