சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் கோரிக்கை
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பல மில்லியன் பேர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோர்க்குத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான விதிமுறையை அகற்ற வேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட்-19 பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களது எல்லைகளை மூடின. இதனால் சிங்கப்பூரில் வசிக்கும் பல நூறாயிரம் மலேசியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல், நெடுநாள்களாகத் தங்களது குடும்பங்களைவிட்டுப் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி தாய்நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று இணையம் வழியாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றுக் காலை பத்து மணிவரை, அந்தக் கோரிக்கை மனுவில் 9,316 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இரு வாரங்களுக்குமுன் அந்த இணையவழிக் கோரிக்கையை விடுத்த திரு டேனி டே, 43, குறுகிய காலத்தில் இத்தனை பேர் அதில் கையெழுத்திட்டிருப்பது தமக்கு வியப்பளிக்கிறது என்றார்.
"இங்கு வேலைசெய்துவரும் பலருடன், வேலை இழந்தவர்களும் மலேசியர்களை மணம் முடித்த சிங்கப்பூரர்களும் தங்கள் அன்புக்குரியவர்களைவிட்டுப் பிரிந்து இருக்கின்றனர். இது மிகுந்த மனஅழுத்தத்தைத் தருகிறது. இத்தகைய சூழலில், ஜோகூர் பாருவில் 14 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள பணம் செலுத்தும்படி வேலையிழந்த மலேசியர்களிடம் கேட்பது நியாயமில்லை," என்றார் திட்ட மேலாளராகப் பணியாற்றும் திரு டேனி.
அதனால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கு இருவார தனிமைப்படுத்தலை அகற்றுவது குறித்தும் அதற்குப் பதிலாக 'பிசிஆர்' பரிசோதனை முடிவிற்காக ஒருநாள் மட்டும் தனிமைப்படுத்திக்கொள்வதையும் மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருமுறையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திரு டேனி, கோலாலம்பூரில் வசித்துவரும் தமது குடும்பத்தை, குறிப்பாகத் தமது பத்து வயது மகனைப் பிரிந்து உழல்வதாகக் கூறினார்.
இப்போதைக்கு, மலேசியாவிற்குத் திரும்புபவரும் சிங்கப்பூர்க்கு வருபவரும் மலேசியாவில் 14 நாள்கள், சிங்கப்பூரில் 14 நாள்கள் என மொத்தம் 28 நாள்கள் அதற்குரிய இடங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு மலேசியாவில் கிட்டத்தட்ட 2,200 ரிங்கிட்டும் சிங்கப்பூரில் 2,200 வெள்ளியும் செலவாகும்.
இதனிடையே, எல்லையைத் திறந்தபிறகு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் சென்றுவருவதை உறுதிசெய்யும் விதமாக, தத்தம் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை இரு நாடுகளும் அங்கீகரிக்க வகை செய்யும் உடன்பாடு தொடர்பில் சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்கள் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் இந்தியர் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் பி.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

