மலேசியாவில் பெரியவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் குறைந்தது ஒருமுறையேனும் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், பெரியவர்களில் 46.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒருமுறையும் 21.8 விழுக்காட்டினர் இருமுறையும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 14ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 400,000 பேர்க்குமேல் தடுப்பூசி போடப்படுவதாக அவர் சொன்னார். சாதனை அளவாக நேற்று முன்தினம் மட்டும் 507,050 தடுப்பூசி போடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இதுவரை 10,920,862 பேர் முதல் தடுப்பூசியையும் 5,104,054 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
"தடுப்பூசி போடுவதன்மூலம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் தீவிர நோய்த்தொற்றையும் குறைக்க முடியும்," என்றார் திரு முகைதீன்.
ஒரே நாளில் 15,573 பேர் பாதிப்பு
இதற்கிடையே, மலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 15,573 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று டுவிட்டர் வழியாகத் தெரிவித்தார். ஆக அதிகமாக, சிலாங்கூரில் 7,672 பேர் பாதிக்கப்பட்டனர். கோலாலம்பூர் (2,063), கெடா (937), ஜோகூர் (722) ஆகியவை அடுத்த இடங்களைப் பிடித்தன. அவர்களில் 'டெல்டா' கிருமியால் 106 பேர் உட்பட கவலை தரக்கூடிய உருமாறிய கிருமிகளால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

