சிங்கப்பூரில் இன்று (ஜூலை 26) பிற்பகல் நிலவரப்படி உள்ளூரில் புதிதாக 129 பேருக்குக் கொரோனா தொற்றியது. அவர்களில் 61 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு அதன் அன்றாட அறிக்கையில் கூறியது.
அதன்வழி, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக்குழுமத்தில் மொத்தம் 853 பேர் உள்ளனர்.
மேலும், 'கேடிவி' நிலையக் குழுமத்தின் தொடர்பில் ஆறு புதிய தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அக்குழுமத்தில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை மொத்தம் 243 ஆகும்.
உள்ளுரில் கிருமித்தொற்று உறுதியான அந்த 129 பேரில் 76 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமையில் இருந்து வந்தனர். முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற 25 பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 28 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் ஒருவர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர். ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவருக்கு கடும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வந்த ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

