உரிமமற்ற இரவுநேரக் கேளிக்கை விடுதிகளிலும் உணவு பான கடைகளாக மாற அரசு மானியம் பெற்ற கேளிக்கை விடுதிகளிலும் தொடர் சோதனைகள் நடத்தப்படு வதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்த மாதம் வரை இரண்டு வகை விடுதிகளுக்கும் எதிராக போலிசார் 202 சோதனைகளை மேற்கொண்டனர். அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் சோதனை நடைபெறுவதாக அமைச்சர் கூறினார். சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலிஸ் சோதனைகள் தொடரும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த 12ஆம் தேதி ஒரு கேடிவி கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுக்குழுமத்தின் தொடர்பில் தற்போது 230 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் வழி ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திலும் மற்ற இடங்களிலும் தொற்று பெருமளவில் பரவியதன் காரணமாக, அரசாங்கம் கடந்த வாரம் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. போலிஸ் சோதனைகளில் பொதுபொழுதுபோக்குச் சட்டம், மதுக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக 58 சட்டமீறல்களும் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான 595 மீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் கட்டுப்பாடுகள் தொடர்பான வெளிநாட்டு ஊழியர் சட்டம், குடிநுழைவுச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மீறப்பட்டதற்காக 142 கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
"போலிஸ் நடவடிக்கைகள் பற்றி யாருக்கேனும் இருக்கும் கேள்வி
களுக்கு இது பதிலாக இருக்கும்: ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் நடவடிக்கை," என்றார் திரு சண்முகம்.
2020 அக்டோபர் முதல் 20 வாரயிறுதிகளிலும் பண்டிகை காலத்திலும் போலிஸ் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் 400 உணவு பானக் கடைகள் சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

