பொங்கோல் தொடக்கப்பள்ளி கொவிட்-19 குழுமம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

2 mins read
40d65aef-a107-4d33-b33a-519a08127640
-

பொங்கோல் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும். இந்தப் பரிசோதனை இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது.

பொங்கோல் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர் தொடர்புடைய புதிய கொவிட்-19 குழுமம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

அப்பள்ளி இன்று முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பாடம் கற்கும் அணுகுமுறையைக் கையாள்கிறது.

ஆசிரியர் ஒருவருக்கும் இரண்டு மாணவர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பொங்கோல் தொடக்கப்பள்ளி நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் அந்த ஆசிரியர் நெருங்கிய தொடர்பில் இருந்ததில்லை என்று பள்ளி கூறியது. பொங்கோல் தொக்கப்பள்ளி கொவிட்-19 குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனரா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது. பொங்கோல் தொடக்கப்பள்ளி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.

அப்பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோர் உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்ய பள்ளியுடனும் பெற்றோருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக அது தெரிவித்தது.

"மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். அவர்கள் தொடர்ந்து சுகாதாரமிக்க பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்," என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியது.