கிருமி முதலில் தலைகாட்டிய கேரளா மீண்டும் மிரட்டுகிறது

கிருமி முதலில் தலைகாட்டிய கேரளா மீண்டும் மிரட்டுகிறது

3 mins read

3வது அலைக்கு மூல காரணமாகலாம் என்ற அச்சம்; எதிர்ப்பு சக்தி உள்ள மக்கள் 44%தான்

இந்­தி­யாவில் முதன்முதலாக 2020ல் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கேரள மாநிலத்தில்தான் தலைகாட்டியது.

அந்த மாநி­லத்­தில் அதுமுதல் கொரோனா கிருமி முற்றிலும் ஒடுங்­கு­வ­தற்­கான அறி­கு­றி­கள் இன்றுவரை தெரி­ய­வில்லை.

நாட்­டில் மூன்­றா­வது அலைக்­கான மைய­மாக கேரளா உருவெடுக்கக்கூ­டும் என்று அச்சப்படும் அளவுக்கு அந்த மாநி­லத்­தில் தொற்று தொடர்ந்து இப்போது அதி­க­மாக இருந்து வருவதாகக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கேர­ளா­வில் வார இறுதி நாட்­களில் முழு­மு­டக்­கம் நடப்­புக்கு வரு­கிறது. இதன்­படி, நாளை­யும் மற்­றும் ஆகஸ்டு 1ஆம் தேதி­யும் முழு ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என அறி­விக்­கப்­பட்டது.

இதனிடையே, அந்த மாநி­லத்­திற்கு உதவு­வ­தற்­காக மத்­திய அர­சாங்­கம் ஆறு பேர் அடங்­கிய ஒரு குழுவை உடனே அனுப்பி உள்ளதாக இந்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா நேற்று தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் அன்­றா­டம் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரில் ஏறத்­தாழ 40 விழுக்­காட்டி­னர் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கி­றார்­கள். நாள் ஒன்­றுக்குச் சரா­ச­ரி­யாக கேர­ளா­வில் ஏறத்­தாழ 17,443 பேருக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

அந்த மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 22,056 பேருக்கு தொற்று ஏற்­பட்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது. 131 பேர் பலி­யா­ன­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தியா முழு­வ­தும் கடந்த 24 மணி நேரத்­தில் 43,509 பேர் புதி­தாக கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னார்­கள்.

இவர்­களில் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள் 50 விழுக்­காட்­டுக்­கும் அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தியா முழு­வ­தும் இரண்­டா­வது அலை ஓய்ந்து வரும் நிலை­யில், கேர­ளா­வில் மட்­டும் நில­வ­ரம் வேறு பட்டு உள்ளது.

அந்த மாநி­லத்­தில் 44.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே கொவிட்-19 கிரு­மியை எதிர்க்­கக்­கூ­டிய ஆற்­றல் உட­லில் இருப்­பதாக ஜூன் மாதம் 14ஆம் தேதிக்­கும் ஜூலை 6ஆம் தேதிக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்ட பரி­சோ­தனை ஆய்வு மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது என்று இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் குறிப்­பிட்டுள்ளது.

தேசிய அள­வில் இந்த ஆற்­ற­லின் விகிதம் 67.7 விழுக்­காடு. கேர­ளா­வை­விட கிருமி எதிர்ப்பு ஆற்­றல் விகி­தம் குறை­வாக உள்ள மாநி­லம் வேறு எது­வும் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆகை­யால் தொற்று கார­ண­மாக மேலும் பலர் பாதிக்­கப்­படும் ஆபத்து இருப்­ப­தாக வல்­லு­நர்­கள் எச்­ச­ரிக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும் சூழ்­நிலை கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்து வரு­கி­றார். இரண்­டா­வது அலை இந்த மாநி­லத்­தில் மெது­வா­கத்­தான் தொடங்­கி­யது என்று குறிப்­பிட்ட அவர், மாநிலத்தில் தடுப்­பூசி தட்­டுப்­பாடு நில­வு­வதை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தி­யா­வில் முதல் அலை ஏற்­பட்டு நாடு முழு­வ­தும் கிருமித்தொற்று குறைந்து வந்தபோது தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­த­னர். பிறகு தொற்று மிகவும் குறைந்தது.

அதுபோலவே இப்போதும் வரும் நாட் களில் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் என்று கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

இந்தியாவில் கிருமி பாதிப்புக்கு ஆளான மக்களின் மொத்த எண்ணிக்கை 3.15 கோடியாகியது. மரண எண்ணிக்கை 4.22 லட்சம் என்று நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.