2வது காலாண்டின் தொழிலாளர் சந்தை நிலவரம்
சிங்கப்பூரில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதன் தாக்கம் தொழிலாளர் சந்தையில் எதிரொலித்தது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வேலை பார்த்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்ததாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
வெளிநாட்டு வீட்டுவேலை பணிப்பெண்களைச் சேர்க்காமல் பார்க்கும்போது மொத்த வேலைகளில் 15,700 வேலைகள் குறைந்தன.
மே மாதம் 16ஆம் தேதி முதல் ஜூன் 13 வரை நடப்பில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூர் வாசிகளுக்கான வேலை வாய்ப்புகள் சிறிதளவே கூடின.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் வர தொடர்ந்து கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்து வருவதன் விளைவாக வெளிநாட்டினருக்கான வேலைகளில் பெரும் இறக்கம் காணப்பட்டது.
சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இந்த இறக்கத்தை ஈடுசெய்ய போதுமான அளவுக்கு இல்லை.
மனிதவள அமைச்சு தன்னுடைய தொழிலாளர் சந்தை அறிக்கையில் சிங்கப்பூர்வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கவில்லை.
செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் இரண்டாவது காலாண்டு முழுமையான அறிக்கையில் பல விவரங்களும் தெரியவரும்.
இதனிடையே, வேலையின்மை விகிதம் சென்ற மாதம் தொடர்ந்து குறைந்தது. மே மாதம் மொத்த வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காடாக இருந்தது. அது 2.7 விழுக்காடாகக் குறைந்தது.
சிங்கப்பூர் வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் மே மாதம் 3.8 விழுக்காடாக இருந்தது. சென்ற மாதம் அது 3.7 விழுக்காடாகக் குறைந்தது.
சிங்கப்பூர் குடிமக்களுக்கான வேலையின்மை விகிதம் சென்ற மாதம் 3.8 விழுக்காடுக்கு இறங்கியது. சென்ற மாதம் சிங்கப்பூரில் வேலையில்லாமல் இருந்த குடிமக்கள், நிர்ந்தரவாசிகளின் எண்ணிக்கை 86,600.
இது கடந்த மார்ச் மாதத்தில் 95,500 ஆக இருந்தது.
இதனிடையே, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் ஆட்குறைப்புகொஞ்சம் கூடி 2,500 ஆக இருந்தது. இந்த நிலவரம் பற்றி கருத்து தெரிவித்த மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், மீட்சிக்கான பாதை பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இருந்தாலும் ஒன்றாகச் சேர்ந்து கொவிட்-19 தொற்றைச் சமாளித்து வலுவாக நாம் மீண்டு எழுவோம் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மனிதவள அமைச்சின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் பற்றி கருத்துரைத்த சில வல்லுநர்கள், அவை ஊக்கமூட்டுவதாகக் கூறினர்.
இருந்தாலும் தொழிலாளர் சந்தை, கொவிட்-19க்கு முந்தைய அளவை விரைவில் எட்டிவிடும் என்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

