எழுபது வயதும் அதற்கும் மேற்பட்டோரில் ஐவரில் ஒருவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னும் பதிவு செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 96,000க்கும் மேற்பட்ட மூத்தோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்யவில்லை என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்தோர் படிப்படியாக முன்வருவதாக அவர் கூறினார்.
"70 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் 79 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர். நாள்தோறும் கிட்டத்தட்ட 1,000 மூத்த குடிமக்கள் தடுப்பூசிக்கான பதிவை மேற்கொள்கின்றனர்.
"தடுப்பூசிக்காக மூத்தோரை நாடுவதில் மக்கள் கழகம், மூத்த தலைமுறையினர் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்களும் தொண்டூழியர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மூத்தோர் அதிகமாக வசிக்கும் இடங்களுக்கு நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
"தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இயன்றவரை அதிகமான மூத்தோரை அணுகும் முயற்சிகளைத் தொடர்வோம்," என்றார் டாக்டர் ஜனில்.
தடுப்பூசி தொடர்பாக மூத்த குடிமக்களிடையே நிலவும் தயக்கம் குறித்தும் தவறான தகவல்களை முறியடிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரல்ட் கியாம் வினா எழுப்பினார். அதற்குப் பதில் கூறியபோது டாக்டர் ஜனில் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களுக்கு எதிராகச் சுகாதார அமைச்சு விளக்கப்படங்களை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை முறியடிக்க ஒட்டுமொத்த சமூகத்தின் ஈடுபாடு தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

