வரும் 10ஆம் தேதி முதல் அதிகபட்சம் ஐவர் ஒன்றுகூடலாம்; வீடுகளில் ஐவரை வரவேற்கலாம்
முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டிருந்தால், வரும் செவ்வாய்க்கிழமை 10ஆம் தேதியில் இருந்து உணவகங்களில் அதிகபட்சம் ஐவர் சேர்ந்து உண்ண அனுமதிக்கப்படுவர்.
தடுப்பூசி போட்டிராவிடினும் நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றவர்களும் கிருமித்தொற்றில் இருந்து மீண்டவர்களும் அத்தகைய ஐவர் குழுவில் இடம்பெறலாம்.
சமூக ஒன்றுகூடல் ஐவர்வரை இடம்பெறலாம். வீடுகளில் அதிகபட்சம் ஐந்து விருந்தினர்களை வரவேற்கலாம். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், தொற்று அபாயம் அதிகமுள்ள பிற நடவடிக்கைகளிலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியும்.
அத்துடன், தடுப்பூசி போட்டு இருந்தாலும் போட்டிராவிடினும் அனைவரும் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் அமர்ந்து உண்ணலாம். ஆயினும் அந்த வகையில் ஒரு குழுவில் அதிகபட்சம் இருவர் மட்டுமே இடம்பெற முடியும்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இதனைத் தெரிவித்தார்.
தேசிய தினவாக்கில் சிங்கப்பூர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தத் தளர்வுகள் சாத்தியமாகி உள்ளன என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சொன்னார்.
கொரோனா பரவல் நிலைமை கட்டுக்குள் இருந்தால், ஆகஸ்ட் 19ஆம் தேதியில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்போர் வரம்பும் கடைத்தொகுதிகள், சுற்றுலாத் தலங்களில் கொள்ளளவு வரம்பும் மேலும் அதிகரிக்கப்படும். 50% பணியாளர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப முடியும்.
இந்த ஆயத்தநிலை ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு, அதாவது செப்டம்பர் தொடக்கம்வரை நீடிக்கும் என்றும் இது, கொவிட்-19 மீட்சி நாடாக உருவெடுப்பதில் சிங்கப்பூரின் நான்கு கட்ட நிலைமாற்றத்தில் முதலாம் நிலை என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, அதிகமான பொருளியல் நடவடிக்கைகள் இடம்பெறும்போது, சமூக நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறலாம்; பயணங்களை மீண்டும் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அப்படிச் செய்யும்போது, கிருமி தொற்றுவதும் அதனால் உயிரிழப்பு நிகழ்வதும் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள சிங்கப்பூரர்கள் மனத்தளவில் தயாராக இருக்க வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.
"ஆனாலும், தீவிர கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதையும் உயிரிழப்பையும் குறைக்க எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். ஆதலால், முடிந்தளவு அதிகமானோர்க்கு விரைவாகத் தடுப்பூசி போடுவதும் மிக முக்கியம்," என்றார் அவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டனரா இல்லையா என்ற அடிப்படையில் தனிமனிதர்கள் வேறுபடுத்தப்படுவது தொடரப்படும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிக்கப்படுவது தொடரும். கழிவுநீர்ப் பரிசோதனை விரிவுபடுத்தப்படும். கால அட்டவணைப்படி, பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது வழக்கப்படுத்தப்படும். இவையெல்லாம், கிருமிப் பரவல் மெதுவடையச் செய்ய உதவும்.
இந்நடவடிக்கைகள் பலனளித்தால், சிங்கப்பூர் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்க முடியும் என்று பணிக்குழுவின் இணைத்தலைவருமான திரு ஓங் கூறினார்.

