நாடாளுமன்றத்தில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், செப்டம்பர் மாதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. ஆனால், திரு முகைதீனுக்குத் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் நெருக்குதல் அளித்துவரும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்துமாறு மலேசிய மாமன்னர் திரு முகைதீனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாமன்னரிடம் 'பெரிக்கத்தான் நேஷனல்' (பிஎன்) அரசாங்கம் கொண்டிருந்த பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டதை எதிர்க்கட்சியினர் நிரூபிக்க முயன்றுவரும் வேளையில், நேற்று பிரதமர் முகைதீனுடன் மாமன்னர் சந்திப்பு நிகழ்த்தினார். அச்சந்திப்பின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னதாகவே நடத்துமாறு மாமன்னர் கூறினார்.
மாமன்னருடன் நடந்த சந்திப்பை அடுத்து, 'பிஎன்' தலைவர்களுடன் அவசரக் கூட்டம் ஒன்றும் நேற்று நடந்தது. அதற்காக பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக்கொள்ள திரு முகைதீனின் கூட்டணிக் கட்சியினர் நேற்று முன்தினம் முதல் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெறப் போகிறது என்ற பரபரப்பு நிலவ, அடுத்த புதன்கிழமைகூட நடக்கும் சாத்தியம் உண்டு என்று அரசாங்க அதிகாரி ஒருவர் 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை திரு முகைதீனின் கையைவிட்டு நழுவிவருவதைக் கடந்த ஒரு வாரமாக நடந்த நிகழ்வுகள் காட்டி வர, நேற்றைய சந்திப்புகளுக்கான தேவையையும் அந்நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
மலேசிய நாடாளுமன்றத்தில் தற்போது 220 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியைக் கைப்பற்ற குறைந்தது 111 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை திரு முகைதீனுக்கு அளிக்கவேண்டும்.
முன்னதாக, திரு முகைதீனின் தலைமையை நிராகரிப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 105 எம்பிகள் மாமன்னருக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று திரு முகைதீனின் தலைமைத்துவத்திலிருந்து அம்னோ எம்பிக்கள் 11 பேர் விலகுவதாகத் தெரிவித்தபோதிலும், தமக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று சுல்தான் அப்துல்லாவிடம் திரு முகைதீன் கூறினார்.
அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த மாதம் நடத்தித் தம் பெரும்பான்மையை நிரூபித்திட மாமன்னர் தம் ஒப்புதலை அளித்தார். இருப்பினும், நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில் பதவி விலகுவது குறித்து திரு முகைதீனிடம் பேச அழைத்திருந்த மாமன்னரை பிரதமர் முகைதீன் திசை திருப்பிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவற்கான பேச்சும் இதற்கிடையே எழுந்துள்ளது. அவ்வாறு கலைக்கப்பட்டால் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். இந்நிலையில், எம்பிக்களின் பெரும்பான்மை ஆதரவு திரு முகைதீனுக்கு இல்லை என்ற பிரகடனங்களை சுல்தான் அப்துல்லா ஏற்றுக்கொண்டால், இன்னும் ஈராண்டில் நடைபெறவுள்ள அடுத்த தேர்தல்வரை பிரதமர் முகைதீனுக்குப் பதிலாக வேறொருவரை மாமன்னர் பிரதமராக நியமிக்கலாம்.


